குடகனாற்றில் தடுப்பணை கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் கலெக்டர் உத்தரவு

குடகனாற்றில் தடுப்பணை கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் அன்பழகன் உத்தரவிட்டார்.;

Update: 2018-03-14 22:45 GMT
அரவக்குறிச்சி,

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே வெஞ்சமாங்கூடலூரில் குடகனாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை கலெக்டர் அன்பழகன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், “விவசாயிகள், பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று ரூ.7 கோடி செலவில் தடுப்பணை கட்டும் பணி நடந்து வருகிறது. ஒப்பந்தப்படி வருகிற அக்டோபர் மாதம் பணிகள் முடிவடைய வேண்டும். ஆனால் அதற்கு முன்பாக விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கோடை காலத்திற்கு முன்பாகவே பணி நிறைவடைந்தால் மழைக்காலத்தில் நீர் தேக்கப்படும். அதன் மூலம் 238 எக்டேர் விளைநிலங்கள் பயன்பெறும். தடுப்பணையை சுற்றி உள்ள இடங்களில் 100 ஆழ்துளை கிணறுகள், 50 கிணறுகள் நிலத்தடி நீர் செறிவூட்டம் பெறும்” என்றார்.

இதேபோல அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் செங்காடு பகுதியில் பசுமை வீடுகள், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் 17 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டப்பட்டு வரும் பணியை கலெக்டர் அன்பழகன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வுகளின் போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, செயற்பொறியாளர் சடையப்பன், உதவி செயற்பொறியாளர் மீனாகுமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்புமணி, செல்வி, ஒன்றிய பொறியாளர் கண்ணன் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்