மூளையில் கட்டி இருந்ததால் மூளைச்சாவு அடைந்த 6 வயது சிறுமியின் உடல் உறுப்புகள் தானம்

மூளையில் கட்டி இருந்ததால் மூளைச்சாவு அடைந்த 6 வயது சிறுமியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

Update: 2018-03-14 22:00 GMT
சிக்கமகளூரு,

மூளையில் கட்டி இருந்ததால் மூளைச்சாவு அடைந்த 6 வயது சிறுமியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

6 வயது சிறுமி

சித்ரதுர்கா மாவட்டம் மல்காலமூரு தாலுகா மொகலஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சித்தேசாமி. இவரது மனைவி கீதா. இவருக்கு 2 மகள்கள். இதில் மூத்த மகளின் பெயர் ஜான்வி(வயது 6). இந்த சிறுமி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் யு.கே.ஜி. படித்து வந்தாள். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென ஜான்வியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

இதையடுத்து அவளை, அவளுடைய பெற்றோர் சித்ரதுர்காவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவளை பரிசோதித்த டாக்டர்கள் சிறுமிக்கு மூளையில் கட்டி இருப்பதாகவும், அதனால் அவள் உயிர் பிழைப்பது கடினம் என்றும் தெரிவித்து விட்டனர்.

மூளைச்சாவு அடைந்தாள்

இருப்பினும் சிறுமியை எப்படியாவது காப்பாற்றி விடலாம் என்ற நம்பிக்கையில் அவளை, அவளுடைய பெற்றோர் மங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சிறுமி ஜான்வி மூளைச்சாவு அடைந்தாள்.

இதையடுத்து அவளுடைய உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவளது பெற்றோர் முன்வந்தனர். அதன்பேரில் டாக்டர்கள் குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் சிறுமி ஜான்வியின் உடலில் இருந்து கண்கள், சிறுநீரகங்கள், இதயம் உள்ளிட்ட உறுப்புகளை பிரித்தெடுத்தனர். பின்னர் அவற்றை பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து பெங்களூருவுக்கு அனுப்பி வைத்தனர்.

3 பேருக்கு பொருத்தப்பட்டன

அதன்பேரில் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த ஆந்திராவைச் சேர்ந்த ஒரு சிறுமி உள்பட 3 பேருக்கு, ஜான்வியின் உடல் உறுப்புகள் பொருத்தப்பட்டன.

மேலும் செய்திகள்