உஷா சாவுக்கு நீதி கேட்டு நடந்த மறியல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 26 பேரை ஜாமீனில் விடுவிக்க உத்தரவு

உஷா சாவுக்கு நீதி கேட்டு நடந்த சாலை மறியல் போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 26 பேரையும் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்க கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Update: 2018-03-14 22:30 GMT
திருச்சி,

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள சூலமங்கலத்தை சேர்ந்த ராஜாவும், அவரது மனைவி உஷாவும் கடந்த 7-ந்தேதி மோட்டார் சைக்கிளில் திருச்சி வந்தனர். ராஜா தலையில் ஹெல்மெட் அணியாததால் துவாக்குடி சுங்கச்சாவடி அருகே இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையிலான போக்குவரத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். ராஜா நிற்காமல் சென்றதால் பாய்லர் ஆலை ரவுண்டானா அருகே அவரது மோட்டார் சைக்கிளை இன்ஸ்பெக்டர் காமராஜ் எட்டி உதைத்தார். இதில் கீழே விழுந்த உஷா தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து உஷா சாவுக்கு நீதி கேட்டும், இன்ஸ்பெக்டர் காமராஜை உடனே கைது செய்யக்கோரியும் பாய்லர் ஆலை ரவுண்டானாவில் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டு சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். இதனால் திருச்சி- தஞ்சாவூர் சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தின்போது ஏராளமான பஸ்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. போலீசார் தடியடி நடத்தியதில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

இது தொடர்பாக திரு வெறும்பூர், பாய்லர் பிளாண்ட் மற்றும் துவாக்குடி போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து 23 பேரை கைது செய்தனர். சட்ட விரோதமாக கூடி பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. கடந்த திங்கட்கிழமை இந்த வழக்கு தொடர்பாக மேலும் 3 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

இவர்கள் 26 பேரையும் விடுதலை செய்யக்கோரி திருச்சி முதன்மை செசன்சு கோர்ட்டில் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுக்கள் நேற்று நீதிபதி எஸ். குமரகுரு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் சம்பத்குமார் ஆஜர் ஆனார். 26 பேர் சார்பில் மாவட்ட வக்கீல் சங்க தலைவர் பன்னீர்செல்வன் ஆஜர் ஆகி வாதாடினார். மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் வழக்கின் தன்மையை விளக்கி மனுவும் கொடுக்கப்பட்டது.

விசாரணை முடிவில் பொது சொத்துக்களை சேதப்படுத்தியதற்காக 26 பேரும் தலா ரூ.500 வைப்புத்தொகை செலுத்த வேண்டும், மறு உத்தரவு வரும் வரை தங்கள் மீது வழக்கு உள்ள போலீஸ் நிலையங்களில் தினமும் காலை 10 மணிக்கு ஆஜர் ஆகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் ஜாமீன் வழங்கி நீதிபதி குமரகுரு உத்தரவிட்டார்.

உஷா சாவுக்கு காரணமான வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் காமராஜும் தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி மனு தாக்கல் செய்து உள்ளார். நேற்று இந்த மனுவும் இதே கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது காமராஜ் சார்பில் ஆஜரான வக்கீல் அதனை 16-ந்தேதி (நாளை) விசாரணைக்கு எடுத்து கொள்ளவேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து அந்த மனு மீதான விசாரணையை நாளை நடத்துவதற்கு நீதிபதி உத்தரவிட்டார். 

மேலும் செய்திகள்