அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 1879-ம் ஆண்டு மார்ச் 14-ந்தேதி ஜெர்மனியில் பிறந்தார். தந்தையின் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் குடும்பம் இத்தாலிக்கு குடிபெயர்ந்தது.

Update: 2018-03-14 05:00 GMT
ஐன்ஸ்டீன் படிப்புக்காக சுவிட்சர்லாந்துக்கு சென்றார். 1896-ல் சுவிஸ் கூட்டமைப்பு பல்தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் டிப்ளமோ பட்டம் பெற்றார். பின்பு, சுவிட்சர்லாந்து நாட்டின் குடியுரிமையைப் பெற்றார். தொடர்ந்து பவுதிக விஞ்ஞானத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

கண்ணுக்கு புலப்படாத அணுவைப் பற்றியும் பரந்து விரிந்து கிடக்கும் ஆகாயத்தை பற்றியும் ஆராய்ந்த ஐன்ஸ்டீன், ‘தியரி ஆப் ரிலேட்டிவிட்டி’ என்ற கோட்பாட்டை வெளியிட்டார். அதுதான் சார்பியல் கோட்பாடு, அந்த கோட்பாடு மூலம் அவர் உலகுக்கு தந்த புகழ்பெற்ற கணித இயற்பியல் வாய்ப்பாடு தான், ‘எப்பொருளும் ஓய்வு நிலையிலோ அல்லது இயங்கு நிலையிலோ இருக்கும் போது அது ஒரு குறிப்பிடத்தக்க சக்தியை கொண்டிருக்கும்’ என்பது. இந்த பார்முலா தான் அணுகுண்டு தயாரிப்பின் அடிப்படையாகும். 1921-ம் ஆண்டு ஐன்ஸ்டீனின் மற்றொரு கண்டுபிடிப்பான ‘போட்டோ எலக்டிரிக் எபெக்ட்’ என்ற கண்டுபிடிப்புக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இவர், உலகப்போரில் ஜெர்மனி கலந்து கொண்டதற்கு வெளிப்படையாக கண்டனம் தெரிவித்தார். அதுமட்டுமல்ல ஹிட்லர் ஆட்சிக்கு வந்த பின்னர் ஜெர்மனியிலிருந்து அமெரிக்காவிற்கு வந்தார். வேறு சில இயற்பியல் வல்லுனர்களுடன் சேர்ந்து அமெரிக்க அதிபருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் ஹிட்லரின் ஆட்சியில் ஜெர்மனிக்கு அணுகுண்டை தயாரிக்கும் வல்லமை உள்ளது என்று எச்சரித்தார். ஆனால் அமெரிக்காவோ அதை தடுத்து நிறுத்தாமல் ஐன்ஸ்டீனுக்கு தெரியாமலே சொந்தமாக அணுகுண்டு தயாரித்து, ஜப்பானில் உள்ள ஹிரோசிமா, நாகசாகி ஆகிய நகரங்கள் மீது வீசி பேரழிவை ஏற்படுத்தியது. இதை அறிந்த ஐன்ஸ்டீன் மிகவும் சோகம் அடைந்தார். அறிவியல் கண்டுபிடிப்புகள் மனித குல மேம்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டுமே தவிர, மனித குலத்தின் அழிவுக்கு பயன்படுத்தக் கூடாது என்ற தனது நிலைப்பாட்டில் இறுதி வரை உறுதியாக இருந்தார்.

-பேராசிரியர் அ.முகமதுஅப்துல்காதர்

மேலும் செய்திகள்