ஆம்னி பஸ் மோதி சப்-இன்ஸ்பெக்டர் பலி

பணகுடி அருகே கவர்னரின் பாதுகாப்பு பணிக்கு சென்ற போது ஆம்னி பஸ் மோதி சப்-இன்ஸ்பெக்டர் பரிதாபமாக பலியானார்.

Update: 2018-03-13 22:50 GMT
பணகுடி,

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தை சேர்ந்தவர் செல்லப்பா (வயது 54). இவர் ராதாபுரம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று அதிகாலை கன்னியாகுமரியில் இருந்து மதுரைக்கு செல்வதாக இருந்தது.

அதற்காக காவல்கிணறு பகுதியில் கவர்னரின் பாதுகாப்புக்கு செல்லப்பாவுக்கு பணி ஒதுக்கப்பட்டு இருந்தது. நேற்று காலை 6 மணி அளவில் ராதாபுரத்தில் இருந்து காவல்கிணறு நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் செல்லப்பா புறப்பட்டார்.

பணகுடியை அடுத்த லெப்பை குடியிருப்பு நாற்கரச்சாலை பிரிவில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி பஸ் செல்லப்பா சென்ற மோட்டார் சைக்கிளின் பின்புறமாக திடீரென்று மோதியது. இதில் செல்லப்பா தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்தார். அவரை அந்த பகுதியில் உள்ளவர்கள் மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் செல்லப்பா பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து தொடர்பாக பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் டேவிட் ரவிராஜன் வழக்குப்பதிவு செய்து ஆம்னி பஸ் டிரைவர் சிவகங்கையை சேர்ந்த மணிகண்டன் (48) என்பவரை கைது செய்தார்.

இறந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்லப்பாவுக்கு மிக்கேல் செல்வி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். அவர்களில் ஒரு மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. மிக்கேல் செல்வி அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

மேலும் செய்திகள்