நெல்லிக்குப்பத்தில் பரபரப்பு குப்பை லாரிகளை சிறைபிடித்து பொது மக்கள் போராட்டம்

மாற்று இடத்தில் குப்பைகளை கொட்டகோரி நெல்லிக்குப்பத்தில் குப்பை லாரிகளை சிறைபிடித்து பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-03-13 22:00 GMT
நெல்லிக்குப்பம்,

நெல்லிக்குப்பம் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள், நகராட்சி எல்லை பகுதியான கீழ்பட்டாம்பாக்கம் திருக்குளத்தில் கொட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக கொட்டப்படும் குப்பைகள் மலைபோல் குவிந்து அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது.

இதுதவிர மலைபோல் குவியும் குப்பைகள் அந்த வழியாக செல்லும் மின்பாதை, மின் வயரில் உராய்ந்து அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மேலும், அதிகளவில் தேங்கும் குப்பையால் அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அந்த பகுதியில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, நகராட்சி நிர்வாகம் குப்பைகளை மாற்று இடத்தில் கொட்டுவதற்காக மேல்பாதியில் ஒரு இடத்தை தேர்வு செய்தது. அங்கு குப்பைகளை கொட்டுவதற்கான பணிகளை மேற்கொண்டனர். ஆனால் இதை அறிந்த அந்த பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து குப்பைகளை இங்கு கொட்டக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, திருக்குளத்தில் வழக்கம் போல குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதில் ஆத்திரமடைந்த திருக்குளம் பகுதி மக்கள் நேற்று, ஒன்று சேர்ந்து அங்கு வந்த குப்பை லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த நகராட்சி கமிஷனர்(பொறுப்பு) மகாராஜன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அதிகாரிகளுக்கும், பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.

இதனை தொடர்ந்து குப்பை ஏற்றி வந்த 3 லாரிகளை அங்கேயே ஓரமாக நிறுத்திவிட்டு நகராட்சி ஊழியர்கள் புறப்பட்டு சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்