கடல் சீற்றம் காரணமாக கடலூர் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

கடல் சீற்றம் காரணமாக கடலூர் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

Update: 2018-03-13 22:15 GMT
கடலூர்முதுநகர்,

இந்திய பெருங்கடல் பகுதியில் இலங்கை, குமரிக்கடல், மாலத்தீவு ஆகிய பகுதிகளுக்கு இடையே குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது. அது மேலும் வலுவடைந்து தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் மாலத்தீவு அருகே தாழ்வு மண்டலமாக மாறுகிறது.

இதன் காரணமாக 2 நாட்களுக்கு நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். மேலும் குமரிக்கடல், கேரளாவின் தெற்கு பகுதி, மாலத்தீவு ஆகிய பகுதிகளில் மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 60 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசும்.

இதன் காரணமாக லட்சத்தீவு, கேரளாவின் தெற்கு பகுதி, மன்னார்வளைகுடா ஆகிய பகுதிகளுக்கு மீனவர்கள் 2 நாட்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் வட தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. கடலோர பகுதியில் கடல் காற்றும் அதிகமாக வீசி வந்தது. கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக மீனவர்கள் பெரும்பாலானோர் கடலுக்கு செல்லவில்லை. ஒரு சில மீனவர்கள் மட்டும் பைபர் மற்றும் விசைப்படகுகளில் கரையோரங்களில் மீன்பிடித்து வந்தனர்.

அதேபோல் நேற்றும் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்பட்டன. காற்றும் அதிகமாக வீசியது. கடல் நீரோட்டத்திலும் மாற்றம் ஏற்பட்டது. இதன் காரணமாக நேற்று 3-வது நாளாக கடலூர் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் தேவனாம்பட்டினம், சோனாங்குப்பம், சொத்திக்குப்பம், அக்கரைக்கோரி, தாழங்குடா உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

இதனால் அவர்கள் தங்கள் படகுகளை துறைமுகப்பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர். மீன்கள் வரத்து இல்லாததால் துறைமுக பகுதியில் ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. கடலூர் தாழங்குடா கடற்கரையில் இருந்து பைபர் படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் மீனவர்களும் மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்கள் தங்கள் படகுகளை கடற்கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனர்.

மேலும் செய்திகள்