மாவட்டத்தில் 1,157 தொடக்க நிலை கூட்டுறவு சங்கங்களுக்கு 4 கட்டமாக தேர்தல்
சேலம் மாவட்டத்தில் 1,157 தொடக்க நிலை கூட்டுறவு சங்கங்களுக்கு 4 கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.
சேலம்,
தமிழகத்தில் கூட்டுறவு சங்க தலைவர், துணைத்தலைவர் மற்றும் இயக்குனர்களின் பதவி காலம் முடிவடைவதையொட்டி, தேர்தல் நடத்த தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் 1,157 தொடக்கநிலை கூட்டுறவு சங்கங்களுக்கு 4 கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இத்தேர்தல் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் ரோகிணி தலைமையில் நேற்று நடந்தது.
கூட்டத்தில் சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் மலர்விழி, சேலம் மாநகர போலீஸ் உதவி கமிஷனர் அன்பு, சேலம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் குமார் மற்றும் கூட்டுறவுத்துறை துணை பதிவாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலெக்டர் ரோகிணி பேசியதாவது:-
தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையத்தின்படி, சேலம் மாவட்டத்தில் 1,157 தொடக்கநிலை கூட்டுறவு சங்கங்களுக்கு 4 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
இதன்படி சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள 80 கூட்டுறவு சங்கங்களுக்கும், பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத்துறையின் இயக்குனர் கட்டுப்பாட்டில் உள்ள 159 கூட்டுறவு சங்கங்களுக்கும், மீன் வளத்துறை இயக்குனரின் கட்டுப்பாட்டில் உள்ள 5 கூட்டுறவு சங்கங்களுக்கும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குனரின் கட்டுப்பாட்டில் உள்ள 15 கூட்டுறவு சங்கங்களுக்கும், வீட்டு வசதி கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள 15 கூட்டுறவு சங்கங்களுக்கும், தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குனர் கட்டுப்பாட்டில் உள்ள 4 கூட்டுறவு சங்கங்களுக்கும், கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் மருத்துவப்பணிகள் இயக்குனர் கட்டுப்பாட்டில் உள்ள 6 கூட்டுறவு சங்கங்களுக்கும், வேளாண்மை இயக்குனர் கட்டுப்பாட்டில் உள்ள 7 கூட்டுறவு சங்கங்களுக்கும், சமூக நலத்துறை இயக்குனர் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கூட்டுறவு சங்கத்திற்கும், பட்டு வளர்ச்சித்துறை இயக்குனர் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கூட்டுறவு சங்கத்திற்கும் என மொத்தம் 293 கூட்டுறவு சங்கங்களுக்கு முதல் கட்ட தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இத்தேர்தலை சேலம் மாவட்டத்தில் சிறப்பாக நடத்திட தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அலுவலர்கள் தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையத்தின் அனைத்து விதிமுறைகளையும் முழுமையாக கடைபிடித்து எவ்வித புகார்களுக்கும் இடமின்றி சிறப்பாக நடத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், காவல்துறையின் மூலம் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும். கூட்டுறவு சங்க தேர்தல்களை நடத்தும் அலுவலர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.