சேலம் விமான நிலைய விரிவாக்க பணிக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு
சேலம் விமான நிலைய விரிவாக்க பணிக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட வருவாய் அலுவலரை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
ஓமலூர்,
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காமலாபுரம் சிக்கனம்பட்டி, பொட்டியபுரம், தும்பிபாடி ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தில் சேலம் விமான நிலையம் உள்ளது. இந்த நிலையில் சேலம் விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும் எனவும், செயல்படாமல் உள்ள சேலம் விமான நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்தது.
இதன்தொடர்ச்சியாக விமான நிலைய விரிவாக்கத்திற்காக, இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள், வீடு, கிணறு மற்றும் அரசு நிலங்களின் தற்போதைய நிலவரம் குறித்து வருவாய்த்துறையினர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிலம் கையகப்படுத்தும் பணியை நிறுத்தக்கோரி, சேலம் வந்த தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், விமான நிலைய விரிவாக்கத்திற்கு தங்கள் விவசாய விளைநிலங்களை எடுக்கக்கூடாது என மனு கொடுத்தனர்.
இந்த நிலையில், நேற்று சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், காடையாம்பட்டி தாசில்தார் பெரியசாமி, விமான நிலைய நில எடுப்பு குழு தனி தாசில்தார் சாந்தி, மற்றும் நில எடுப்பு வருவாய்த்துறை அலுவலர்கள் பொட்டியபுரம், சட்டூர், சிக்கனம்பட்டி ஊராட்சியில் நில அளவீடு செய்ய வந்தனர். இதையறிந்த விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட வருவாய் அலுவலர் காரை சிறைபிடித்தனர். மேலும் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமாரை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
அப்போது அவர்கள், தங்கள் நிலத்தை விமான நிலைய விரிவாக்கத்திற்கு கொடுக்க மாட்டோம் எனவும், விவசாயிகளை அழைத்து பேச வேண்டும் எனவும், தங்களுக்கு நோட்டீஸ் வழங்காமல் அளவீடு செய்ய அனுமதிக்க முடியாது எனவும் கூறி முற்றுகையிட்டனர்.
இந்தநிலையில் வருவாய் நில எடுப்பு குழு தாசில்தார் மற்றும் வருவாய்த்துறையினர் தனியாக சென்று நிலத்தை அளவீடு செய்யும் பணியை மேற்கொண்டனர். அப்போது அவர்களிடம் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் நிலத்தை அளவீடு செய்யாமல் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் வருவாய்த்துறையினர் திரும்பி சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.