2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல்

கோலார் தங்கவயல் நகரசபையில் 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

Update: 2018-03-13 21:30 GMT
கோலார் தங்கவயல்,

கோலார் தங்கவயல் நகரசபை அலுவலகத்தில் 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டம் நேற்று நகரசபை தலைவர் ரமேஷ்குமார் ஜெயின் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் நகரசபை துணை தலைவர் ஜெயந்தி சீனிவாசன், என்ஜினீயர் ஸ்ரீதர், நகரசபை கமிஷனர் ஸ்ரீகாந்த், நகரசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் காலை 11.30 மணிக்கு தொடங்கியது.

கூட்டம் தொடங்கியதும் நகரசபை கமிஷனர் ஸ்ரீகாந்த் 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டின் மதிப்பு ரூ.116 கோடி ஆகும். இதில் சில முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்று இருந்தன. இந்த பட்ஜெட்டில் 4 கோடியே 95 லட்சம் செலவில் மத்திய அரசின் அம்ருத் சிட்டி திட்டத்தின் கோலார் தங்கவயலில் உள்ள 3 பூங்காக்களில் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்படும்.

89 துப்புரவு தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். முக்கிய சாலைகளில் பாதசாரிகள் வசதிக்காக நடைபாதைகள் அமைக்கப் படும். ரூ.1 கோடியே 77 லட்சம் செலவில் தேவைப்படும் இடங்களில் உயர்மின்விளக்குகள் அமைக்கப்பட உள்ளது.

இவைகள் உள்பட பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு இருந்தன. இந்த பட்ஜெட்டில் வரவு செலவு போக ரூ.85 லட்சம் உபரி பட்ஜெட் ஆகும். இந்த கூட்டம் 12.30 மணிக்கு முடிவடைந்தது. இதனை தொடர்ந்து வழக்கம் போல் பொதுக்கூட்டம் நடந்தது.

மேலும் செய்திகள்