கர்நாடகத்தில் நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை

கர்நாடகத்தில் நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று பா.ஜனதா குற்றம்சாட்டி உள்ளது.

Update: 2018-03-13 23:15 GMT
பெங்களூரு,

கர்நாடக பா.ஜனதா பொதுச் செயலாளர் ஷோபா எம்.பி. பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை. ரஷ்மி, அனுபமா செனாய், அனுப்ஷெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் தாக்குதலுக்கு உள்ளானார்கள். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் டி.கே.ரவி., அனுராக் தாகூர் உள்ளிட்ட அதிகாரிகள் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். மைசூரு மாவட்ட கலெக்டராக இருந்த ஷிகா அவமானப்படுத்தப்பட்டார்.

அதிகாரிகளின் நம்பிக்கையை பெற்று ஆட்சி நிர்வாகத்தை நடத்த வேண்டும் என்ற குறைந்தபட்ச அறிவு கூட சித்தராமையாவுக்கு இல்லை. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக இருந்த மல்லிகார்ஜுன பன்டே யாருடைய குண்டுக்கு பலியானார் என்ற தகவல் வெளியே வரவே இல்லை. அதைத்தொடர்ந்து அவருடைய மனைவியும் இறந்துபோனார்.

துணை போலீஸ் சூப்பிரண்டு கல்லப்பா ஹன்டிபாக் மரணம் எதற்காக நிகழ்ந்தது என்ற தகவலும் தெரியவில்லை. பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியான சத்தியநாராயணராவ் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் சசிகலாவுக்கு சொகுசு வசதிகளை செய்து கொடுக்கும்படி முதல்-மந்திரி சித்தராமையாதான் உத்தரவிட்டார் என்று சத்தியநாராயணராவ் கூறி இருக்கிறார். இதற்கு சித்தராமையா என்ன பதில் சொல்லப்போகிறார்?.

வித்வத் என்ற இளைஞர் மீது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த என்.ஏ.ஹாரீஸ் எம்.எல்.ஏ.வின் மகன் முகமது ஹாரீஸ் நலபட் தாக்குதல் நடத்தினார். ஊழல்வாதிகளுக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்பட வேண்டும், இல்லாவிட்டால் நேர்மையான அதிகாரிகள் சாக வேண்டும் என்ற நிலை கர்நாடகத்தில் ஏற்பட்டுள்ளது. லோக்அயுக்தா நீதிபதி மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பொறுப்பேற்று சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும்.

ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்க தலைவர் ஆர்.பி.சர்மா தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதி, கர்நாடக அரசு மீது பணியில் அரசியல் தலையீடு உள்பட பல்வேறு புகார்களை கூறியுள்ளார். அந்த கடிதத்தின் பின்னணியில் எங்கள் கட்சி(பா.ஜனதா) இருப்பதாக கூறுவது தவறானது.

இவ்வாறு ஷோபா கூறினார்.

மேலும் செய்திகள்