திருச்சி-பெங்களூருவுக்கு ஆம்னி பஸ் வழித்தடம் பெற்று தருவதாக தொழிலதிபரிடம் ரூ.8 லட்சம் மோசடி

திருச்சி-பெங்களூருவுக்கு ஆம்னி பஸ் வழித்தடம் பெற்று தருவதாக கூறி தொழிலதிபரிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்த கோவையை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-03-13 22:15 GMT
திருச்சி,

திருச்சி கல்லுக்குழி முதல் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 56). தொழிலதிபர். இவர் கடந்த ஆண்டு தனது மகன் பரத்குமார் பெயரில் புதிதாக ஆம்னி பஸ் வாங்கி திருச்சியில் இருந்து பெங்களூருவுக்கு இயக்க முடிவு செய்தார். அதற்காக திருச்சி-பெங்களூரு பஸ் வழித்தடம் பெற கோவை மாவட்டம் கோவைபுதூர் ஐஸ்வர்யா நகரை சேர்ந்த விக்னேஷ் மற்றும் அவருடைய தந்தை காளிமுத்து ஆகியோரை அணுகினார்.

அவர்களும் பஸ் வழித்தடம் வாங்கி தருகிறோம் என்று சுப்பிரமணியிடம் ரூ.7 லட்சத்து 94 ஆயிரம் பெற்றுள்ளனர். மேலும் இதற்காக சுப்பிரமணியனிடம் பரத்குமாரின் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றின் நகல்களை வாங்கியுள்ளனர். ஆனால் விக்னேசும், காளிமுத்துவும் இதுவரை சுப்பிரமணியனுக்கு திருச்சி-பெங்களூருவுக்கு ஆம்னி பஸ் வழித்தடம் வாங்கி கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் பரத்குமாரின் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றின் நகல்களை வைத்து விக்னேஷ் புதிய கார் ஒன்று வாங்கியுள்ளார். இதற்கு உடந்தையாக விக்னேசின் தாய் சாந்தி, சகோதரர்கள் விஷ்ணு, ரவி இருந்துள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் மதுரை ஜகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசாருக்கு இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் விக்னேஷ், அவருடைய தந்தை காளிமுத்து, தாய் சாந்தி, சகோதரர்கள் விஷ்ணு, ரவி ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்