பெரம்பலூரில் மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 23 பேர் கைது

கல்குவாரி ஏலத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பெரம்பலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 23 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-03-13 22:45 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கல் குவாரிகளால் இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு விவசாயம் பாதிக்கப் படுகிறது. எனவே கல்குவாரிகளை மூடிவிட்டு விவசாயத்தை பாதுகாக்கும் நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் பல்வேறு போராட்டம் நடத்தி வருகின்றனர். மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்து முறையிடுவது உள்பட கோர்ட்டு வரை சென்று போராடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற இருந்த கல்குவாரிகள் ஏலத்தை தேதி குறிப்பிடாமல் மாவட்ட நிர்வாகம் ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டது. அதன் பின்னர் கல் குவாரிகள் ஏலத்தை நடத்து வதற்கான பணிகள் நடந்தன. அந்த வகையில் நேற்று திடீரென பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் 34 கல்குவாரிகளுக்கான ஏலம் நடந்தன.

இதனை அறிந்த நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் வக்கீல் அருள் உள்பட கட்சியினர் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் திரண்டனர். பின்னர் அவர்கள், பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் கல்குவாரிகள் ஏலத்தை ரத்து செய்ய வலி யுறுத்தி அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, உயர்நீதிமன்றத்தில் கல் குவாரிகள் ஏலம் தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், எவ்வித முன் அறிவிப்பும் இன்றி ஏலத்தை நடத்துவதை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் உள்பட போலீசார் மறியலில் ஈடுபட்ட 23 பேரை கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்