அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நுழைவுவாயில் மீது அரசு பஸ் மோதல் டிரைவர் -17 பெண்கள் காயம்

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் நுழைவுவாயில் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் டிரைவர் - 17 பெண்கள் காயமடைந்தனர்.;

Update: 2018-03-13 23:00 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவ கல்லூரிக்கு புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று காலையில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ் ஒன்று 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புதுக்கோட்டை மருத்துவ கல்லூரியை நோக்கி சென்று கொண்டிருந்தது.

பஸ்சை டிரைவர் ரவிச்சந்திரன் (வயது 55) ஓட்டினார். அரசு பஸ் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நுழைவுவாயில் பகுதியில் திரும்ப முயன்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நுழைவுவாயிலின் ஒரு பகுதி மீது பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி சேதமடைந்தது.

இதில் பஸ் டிரைவர் ரவிச்சந்திரன் மற்றும் பயணிகள் பழனியம்மாள், மாலதி, சிவகாமி, செல்வி, அஞ்சலை, நூர்ஜகான் பேகம் உள்பட 17 பெண்கள் காயமடைந்தனர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தவர்கள் காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 4 மாதங்களில் 2-வது முறையாக மருத்துவமனை நுழைவுவாயில் மீது பஸ்கள் மோதி விபத்துகுள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்