மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.9½ லட்சம் நலத்திட்ட உதவிகள்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.9½ லட்சம் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் பொன்னையா வழங்கினார்.

Update: 2018-03-13 23:15 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, அதன்மீது நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைத்தார்.

முகாமில் பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் மதுராந்தகம் வட்டம் ஒரத்தி அடுத்த பனங்குளம் கிராமத்தைச்சேர்ந்த இருளர் இனத்தை சேர்ந்த 5 பேருக்கு செங்கல் சூளை அமைப்பதற்காக ரூ.5 லட்சம் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் சட்டபடிப்பு படித்து சட்டதொழில் துவக்க நிதியுதவி கோரி விண்ணப்பித்த 9 பேருக்கு ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்துக்கான காசோலைகளையும், காஞ்சீபுரம் அடுத்த கீழம்பி ஊராட்சியை சேர்ந்த சவுந்தரிக்கு வீட்டுமனை பட்டா மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் யுவனேஷ் என்ற சிறுவனுக்கு ரூ.7 ஆயிரத்து 500 மதிப்பில் நடைபயிற்சி கருவி மற்றும் காதொலி கருவி என மொத்தம் ரூ.9 லட்சத்து 57 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி நூர்முகமது, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயக்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் சக்திவேல், ஆதிதிராவிடர் நல அலுவலர் தமிழ்ச்செல்வி கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்