அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

வடிவுடையம்மன் கோவில் நிலத்தை அளக்க சென்ற அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-03-13 23:00 GMT
திருவொற்றியூர்,

கோர்ட்டு உத்தரவின்பேரில் திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.80 கோடி மதிப்புள்ள நிலத்தை அளக்க சென்ற அதிகாரிளை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். பின்னர் அதிகாரிகள் தரப்பில் கோவில் நிலத்தை இன்று(புதன்கிழமை) அளவீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் சொத்துக்களை அளந்து மதுரை உயர்நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலுக்கு சொந்தமான காலடிப்பேட்டை மார்க்கெட் லைன் பகுதியில் 7 தெருக்களில் உள்ள ரூ.80 கோடி மதிப்புள்ள 6.6 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தில் 316-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது.

கோர்ட்டு உத்தரவின்படி அந்த நிலத்தில் உள்ள வீடுகளை அளக்க திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் அதிகாரிகள், வருவாய் துறையினர் மற்றும் நில அளவையாளர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று காலடிப்பேட்டை மார்க்கெட் லைன் பகுதிக்கு சென்றனர்.

அப்போது அங்கு வந்த பொதுமக்கள் நிலத்தை அளக்க வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இதனால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் அதிகாரிகளிடம், ‘தாங்கள் இந்த பகுதியில் பல தலைமுறையாக வசித்து வருகிறோம். எங்களிடம் அதற்குரிய அனைத்து ஆவணங்களும் உள்ளது. எனவே எங்கள் இடங்களை அளக்கக்கூடாது’ என்று அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அறநிலையத்துறை அதிகாரிகளும், தாசில்தார் ராஜ்குமார், போலீஸ் உதவி கமிஷனர் ரகுராம், இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன் ஆகியோர் பொதுமக்களிடம், ‘கோர்ட்டு உத்தரவின்படி நில அளவீடு செய்யப்படுகிறது. எனவே நிலத்தை அளக்கவிடுங்கள். இல்லையெனில் உங்கள் தரப்பு ஆவணங்கள் இருந்தால் அதனை எடுத்து வாருங்கள்’ என்று கூறினர்.

இதற்கிடையே வருவாய்த்துறையினரும் அந்த இடம் கோவிலுக்கு சொந்தமான இடம் என்பதை உறுதி செய்தனர். அதைத்தொடர்ந்து இன்று (புதன்கிழமை) தனித்தனியாக வீடுகளை அளக்க உள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்