ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அரசியல் தலையீடு கூடாது - அமைச்சர் நமச்சிவாயம் பேச்சு

ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களின் தலையீடு இருக்கக் கூடாது என்று அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்.;

Update: 2018-03-13 23:15 GMT
காரைக்கால்,

காரைக்கால் மதகடி அருகில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் அரசு வளாகத்தில் அரசுத் துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைச்சர்கள் நமச்சிவாயம், கமலக்கண்ணன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

இதில் எம்.எல்.ஏ.க்கள் அசனா, கீதாஆனந்தன், திருமுருகன், மாவட்ட கலெக்டர் கேசவன், புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் சண்முக சுந்தரம், நிர்வாக பொறியாளர்கள் ராஜசேகரன், சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-

மாநிலம் முழுவதும் ஏரிகள் மற்றும் குளங்களில் உள்ள வண்டல் மணலை எடுத்து ஆழப்படுத்தும் பணி விரைவில் தொடங்கப்படும். அந்த மணலை பொதுமக்களே குறைந்த விலையில் விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காரைக்கால் மாவட்டத்தில் நீர்ப்பாசன திட்டத்திற்காக ரூ.1300 கோடிக்கு திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

நீர் நிலைகளை மீட்கவும், அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அரசு நடவடிக்கை எடுக்கிறது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். இதில் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் தலையீடு இருக்கக்கூடாது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வாங்கப்பட்ட அங்கீகாரமற்ற மனைகளுக்கு, அங்கீகாரம் பெறுவதற்கு காரைக்கால் நகரமைப்பு குழுமத்திடம் விண்ணப்பித்தால், குறைந்தபட்சம் 20 நாட்களுக்குள் அவற்றுக்கு அங்கீகாரம் அளிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அதனைதொடர்ந்து அமைச்சர் கமலக்கண்ணன் பேசியதாவது:-

கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை பொய்த்துவிட்டது. காவிரி நீரும் நமக்கு கிடைக்கவில்லை. இதனால் காரைக்காலில் விவசாயம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் நீர் மேலாண்மையை பெருக்க திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக காரைக்கால் மாவட்ட 5 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 549 குளங்களில் 330 குளங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவை அனைத்தையும் தூர்வாரி மழைநீரை சேமிக்க வழிவகை செய்யப்படும். காவிரி நீர் வழக்கு தொடர்பாக, நமது பொதுப்பணித்துறை அதிகாரிகள் உச்ச நீதிமன்றத்தில் சரியான தகவலை தந்ததால் நாம் 7 டி.எம்.சி. தண்ணீரை பெற்றுள்ளோம். இதற்காக அதிகாரிகளை பாராட்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்