லாரி டிரைவர் கொலை வழக்கில் மனைவி உள்பட 6 பேர் கைது

கள்ளக்காதல் விவகாரத்தில் லாரி டிரைவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மனைவி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-03-13 23:00 GMT
கல்பாக்கம்,

கல்பாக்கத்தை அடுத்த ஆயப்பாக்கத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 37). மினி லாரி டிரைவர். இவர் கடந்த 11-ந் தேதி வெங்கம்பாக்கத்தையடுத்த பூந்தண்டலம் பாலம் அருகே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதற்கிடையே அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, மாமல்லபுரம் துணை சூப்பிரண்டு சுப்புராஜுக்கு உத்தரவிட்டார். சதுரங்கப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் பாண்டி, தாழம்பூர் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் ஆகியோர் தலைமையில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் சுசீலா உள்பட 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு செல்வம் கொலையில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

விசாரணையில், செல்வத்தின் மனைவி சந்திரமதிக்கும் (27), அதே கிராமத்தை சேர்ந்த ஆனந்தன் (28) என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகவும், இதை செல்வம் பலமுறை கண்டித்ததாகவும் தெரிகிறது. இதுதொடர்பாக கடந்த வாரம் செல்வத்துக்கும், சந்திரமதிக்கும் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து சந்திரமதி கள்ளக்காதலன் ஆனந்தனிடம் கூறினார்.

இதனைத்தொடர்ந்து ஆனந்தன் கடந்த 11-ந் தேதி இரவு செல்வத்திடம் மாடு ஏற்றி செல்ல கல்பாக்கத்தை அடுத்த வெங்கம்பாக்கம் கிராமத்திற்கு வரும்படி பேசியுள்ளார்.

இதை நம்பிய செல்வம் தனது மினி லாரியில் வெங்கம்பாக்கம் நோக்கி கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்றார். ஆனந்தன் தனது நண்பர்கள் ஸ்ரீதர் (30), கார்த்திக் (22), சுரேஷ் (35), பிரகாஷ் (20) ஆகியோர் பூந்தண்டலம் பாலம் அருகே மினி லாரியை மடக்கி நிறுத்தி செல்வத்தை கத்தியால் வெட்டியுள்ளனர்.

செல்வம் தடுத்தபோது, அவரது கட்டை விரல் துண்டானது. தொடர்ந்து தலை மற்றும் கழுத்தில் வெட்டி விட்டு அனைவரும் தப்பி ஓடி விட்டனர். இதில் செல்வம் பரிதாபமாக இறந்தார் என தெரியவந்தது.

இந்த நிலையில் சந்திரமதியும், பிரகாசும் சென்னைக்கு தப்பி செல்வதற்காக வெங்கப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தனர். தனிப்படை போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். மற்றவர்களும் தப்பி வெளியூர் செல்வதற்காக முள் தோப்பில் பதுங்கி இருந்தனர். அவர்கள் 4 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்