தஞ்சை–திருச்சி இடையே அமைக்கப்பட்டுள்ள இரட்டை ரெயில்பாதை தண்டவாளத்தை இணைக்கும் பணி

தஞ்சை–திருச்சி இடையே அமைக்கப்பட்டுள்ள இரட்டை ரெயில் பாதை தண்டவாளத்தை இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பாதையின் வழியாக வருகிற 28–ந் தேதி முதல் ரெயில்களை இயக்க ரெயில்வே துறையினர் முடிவு செய்துள்ளனர்.

Update: 2018-03-13 22:45 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் நெற்களஞ்சியமாக மட்டுமின்றி தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களுள் ஒன்றாகவும் உள்ளது. தென் மாவட்டங்களுக்கும், சென்னைக்கும் தஞ்சை வழியாக முன்பு அதிக அளவில் ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. நாளடைவில் விழுப்புரம்–திருச்சி இடையேயான ரெயில்பாதை தொடங்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்த பின்னர் அந்த வழியாக ரெயில்கள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது.

மேலும் சுற்றுலா தலங்களான வேளாங்கண்ணி, நாகூர், கோவில் நகரமான கும்பகோணத்திற்கும் பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள். தற்போது தஞ்சை வழியாக 30–க்கும் மேற்பட்ட பயணிகள் ரெயில்களும், 15–க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.


தஞ்சை–திருச்சி இடையே ஒரு வழிப்பாதையாக இருந்ததால் ஒரு ரெயில் வந்தால் எதிர்திசையில் வரும் மற்ற ரெயில் ஏதாவது ஒரு ரெயில் நிலையத்தில் காத்திருந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைகின்றனர். பயண நேரமும் அதிகரிக்கிறது. எனவே தஞ்சை–திருச்சி இடையே இருவழிப்பாதை திட்டத்தை தொடங்க வேண்டும் என பொதுமக்கள், ரெயில் பயணிகள் உபயோகிப்பாளர் சங்கத்தினர் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர். இதையடுத்து மத்திய அரசு தஞ்சை–திருச்சி இடையேயான இரு வழிப்பாதை திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது.

கடந்த 2011–12–ம் ஆண்டு பட்ஜெட்டில் தஞ்சை–திருச்சி இடையே பொன்மலை வரை 49 கிலோ மீட்டர் தூர ரெயில்பாதையை இருவழிப்பாதையாக மாற்ற நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த இரட்டை ரெயில் பாதையில் திருச்சியில் இருந்து தஞ்சை அருகே உள்ள சோளகம்பட்டி ரெயில் நிலையம் வரை தற்போது ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சோளகம்பட்டியில் இருந்து தஞ்சை இடையே தான் இயக்கப்படாமல் இருந்தது.


தற்போது அந்த பணிகளும் நிறைவடைந்துள்ளதால் தஞ்சையில் இருந்து சோளகம்பட்டி வரை ரெயில் என்ஜினை மட்டும் இயக்கி கடந்த மாதம் 9–ந் தேதி அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றதால் சோளகம்பட்டி–தஞ்சை இடையே உள்ள தண்டவாளத்தை தஞ்சை ரெயில் நிலையத்தில் உள்ள தண்டவாளத்துடன் இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் சரக்கு ரெயில்கள் வந்து நிற்கக்கூடிய தண்டவாளமும் சீரமைக்கப்படுகிறது. 7–வது தண்டவாளத்தில் மேம்பாலத்திற்கு கீழே இருந்து 500 மீட்டர் தூரம் அளவுக்கு தண்டவாளம் அப்புறப்படுத்தப்பட்டு மற்றொரு தண்டவாளத்துடன் இணைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியின் காரணமாக சில ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் இந்த மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு வருகிற 28–ந் தேதி முதல் இரட்டை ரெயில் பாதையில் ரெயில்களை இயக்கப்பட உள்ளதாக ரெயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்