கோவில்களுக்கு சொந்தமான இடத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் தீக்குளிக்க முயற்சி

கும்பகோணம் அருகே கோவில்களுக்கு சொந்தமான இடத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-03-13 23:00 GMT
திருவிடைமருதூர்,

இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான இடங்கள் பதிவேடுகளில் உள்ளபடி சரியாக உள்ளதா? என்பது குறித்து ஆய்வு நடத்தும்படி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி கோவில்களுக்கு சொந்தமான இடத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து வருகிறார்கள். பல்வேறு இடங்களில் இந்த பணி நடைபெற்று வருகிறது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் மணல்மேட்டு தெருவில் கோவில்களுக்கு சொந்தமான இடம் குறித்து அளவீடு செய்வதற்காக நேற்று திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவில் உதவி ஆணையர் ஜீவானந்தம் மற்றும் நில அளவையர்களை கொண்ட குழுவினர் அங்கு சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள், மண்எண்ணெய் கேன்களுடன் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குடியிருப்பு பகுதியை அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷம் எழுப்பினர்.

அப்போது அதிகாரிகளிடம் பெண்கள் கூறியதாவது:–

இப்பகுதியில் 100 குடும்பங்கள் 5 தலைமுறையாக வசித்து வருகிறோம். இதுநாள் வரை வசூலிக்கப்படாத வாடகை, வரியை தற்போது வசூலிக்க முற்படுவதை ஏற்கமாட்டோம் என கூறினர். இதையடுத்து அதிகாரிகள், பெண்களை சமாதானம் செய்ய முயன்றனர். இதனிடையே பெண்கள் சிலர் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது அதிகாரிகள் மற்றும் போலீசார் தீக்குளிக்க முயன்ற பெண்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


இதைத்தொடர்ந்து அங்கு உள்ள காளியம்மன் கோவில் வளாகத்தில் கும்பகோணம் தாசில்தார் வெங்கடாசலம், துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், கிராம நிர்வாக அதிகாரி சுமதி மற்றும் அதிகாரிகள் குழுவினர் மணல்மேட்டுத்தெரு பகுதி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. நாளை (வியாழக்கிழமை) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

மேலும் செய்திகள்