ரூ.500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை கோர்ட்டு தீர்ப்பு

ரூ.500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து அரியலூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2018-03-13 22:45 GMT
தாமரைக்குளம்,

அரியலூர் அருகே உள்ள பொய்யாதநல்லூர், காலனி தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 60). இவர் கடந்த 2004-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது மகள் விஜயலட்சுமி திருமணத்திற்காக உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்திருந்தார். அதற்கு கிராம நிர்வாக அதிகாரியின் சான்றிதழ் தேவைப்பட்டதால், அப்போது இலுப்பையூர் கிராம நிர்வாக அதிகாரியாக இருந்த தாமரைக்குளத்தை சேர்ந்த ராமசாமியை சந்தித்து சான்றிதழ் கேட்டுள்ளார். அதற்கு அவர் சான்றிதழ் வழங்க ரூ.500 லஞ்சமாக கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத அண்ணாதுரை, இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரையின் படி, ரசாயன பொடி தடவிய பணத்தை ராமசாமியிடம், அண்ணாதுரை கடந்த 14.10.2004 அன்று கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், ராமசாமியை கையும் களவுமாக பிடித்து கைது செய்து வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணை அரியலூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவி, குற்றம் சாட்டப்பட்ட ராமசாமிக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து போலீசார், ராமசாமியை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகள்