நீலகிரியில் சாரல் மழை: பஸ்சுக்குள் குடை பிடித்தபடி பயணம்

நீலகிரியில் நேற்று பரவலாக சாரல் மழை பெய்தது. மழைக்கு தாக்குபிடிக்காமல் பஸ்சுக்குள் மழைநீர் ஒழுகியதால் குடை பிடித்தபடி பயணிகள் பயணம் செய்தனர். எனவே பஸ்களை முறையாக பராமரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2018-03-13 22:30 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தென்மேற்கு பருவமழையும், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழையும் பெய்து வருகிறது. ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பனிக்காலம் முடிந்து வெயில் அடித்து வந்ததால், வறட்சியான காலநிலை நிலவி வந்தது.

இந்த நிலையில் நேற்று ஊட்டி நகரில் காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மாலை 3.30 மணியளவில் திடீரென சாரல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விட்டு, விட்டு தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது.

இதனால் பள்ளி, கல்லூரிக்கு சென்று விட்டு திரும்பும் மாணவ-மாணவிகள், கூலி வேலைக்கு சென்று வீடு திரும்புகிறவர்கள், அலுவலக பணிகளை முடித்து விட்டு செல்கிறவர்கள் என அனைவரும் மழையில் நனையாமல் இருக்க குடைகளை பிடித்தபடி நடந்து சென்றனர்.

ஊட்டி, லவ்டேல், தலைகுந்தா, கேத்தி உள்ளிட்ட பகுதிகளில் திடீரென சாரல் மழை பெய்ததால் விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. இதேபோல் மஞ்சூர் பகுதியில் நேற்று மாலை 5 மணி அளவில் மழை பெய்தது.

மஞ்சூர் அருகே உள்ள முள்ளிகூர் கிராமத்தில் இருந்து எடக்காடு, தங்காடு வழியாக ஊட்டிக்கு ஒரு அரசு பஸ் சென்றது. பஸ்சின் மேற்கூரை பழுதாகி இருந்ததால் அதன் வழியாக மழைநீர் பஸ்சுக்குள் வந்தது. இதனால் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் சிரமப்பட்டனர்.

சாரல் மழைக்கே பஸ்சுக்குள் மழைநீர் வருகிறது என்றால், பெரும் மழை வந்தால் என்ன நிலை என்பதை சொல்ல முடியாது. நடந்து சென்றால்தான் மழையில் நனைவோம் என்று நினைத்தால் பஸ்சுக்குள்ளும் அதே நிலைதானா என பயணிகள் பேசிக்கொண்டனர். ஒரு சில பயணிகள் குடை பிடித்தபடி பஸ்சில் பயணம் செய்தனர்.

நீலகிரியில் இதே நிலையில் அதிகளவில் பஸ்கள் உள்ளதாகவும், அரசு பஸ்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் பயணிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

மேலும் செய்திகள்