கோடை விடுமுறையை முன்னிட்டு மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே சிறப்பு ரெயில், தெற்கு ரெயில்வே அறிவிப்பு

மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது. இதில் பயணம் செய்வதற்கான முன்பதிவு இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.

Update: 2018-03-13 22:30 GMT
ஊட்டி,

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டிக்கு வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை ரசித்தபடி பயணம் செய்ய மலை ரெயில் பயணத்தை மேற்கொள்ள அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். இதற்காக மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை தினமும் மலை ரெயில் இயக்கப்படுகிறது.

இந்த நிலையில் கோடை காலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகம் இருக்கும் என்பதால் மலை ரெயிலில் கூட்டம் அதிகம் இருக்கும். இந்த நேரத்தில் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் மலை ரெயிலில் பயணம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைகின்றனர். எனவே மலை ரெயில் ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சிறப்பு மலை ரெயிலை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க கோடை விடுமுறையை முன்னிட்டு மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே பாரம்பரிய நீராவி என்ஜின் மூலம் கூடுதலாக சிறப்பு மலை ரெயிலை இயக்க சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

கோடை விடுமுறையை முன்னிட்டு மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே வரும் 31-ந்தேதி முதல் ஜூன் மாதம் 24-ந்தேதி வரை (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும்) சிறப்பு ரெயில் இயக்கப்படும்.

* மேட்டுப்பாளையம்- குன்னூர் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06171), காலை 9.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் புறப்பட்டு, மதியம் 12.30 மணிக்கு குன்னூர் சென்றடையும். மறுமார்க்கத்தில் (வண்டி எண்: 06172), மதியம் 1.30 மணிக்கு குன்னூரில் இருந்து புறப்பட்டு, மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும்.

இந்த ரெயிலில் பயணம் செய்ய முதல் வகுப்புக்கு பெரியவர்களுக்கு ரூ.1100, குழந்தைகளுக்கு ரூ.650, இரண்டாம் வகுப்பில் பயணம் செய்ய பெரியவர்களுக்கு ரூ.800, குழந்தைகளுக்கு ரூ.500 கட்டணம். இந்த ரெயிலுக்கான முன்பதிவு இன்று (புதன்கிழமை) முதல் தொடங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு மலை ரெயில் இயக்கப்படுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 

மேலும் செய்திகள்