மவுசு குறையாத தஞ்சாவூர் கலைத்தட்டு

கலைகளின் பிறப்பிடமாக தஞ்சை விளங்குகிறது. வானுயர்ந்து நிற்கும் தஞ்சை பெரியகோவிலும், வீணையும், கலை ஓவியங்களும், தலையாட்டி பொம்மைகளும் தஞ்சையின் கலை பொக்கிஷத்திற்கு சான்றாக விளங்கி வருகிறது.

Update: 2018-03-13 10:06 GMT
தஞ்சை என்றாலே கலைகள் தான் நினைவுக்கு வரும். அந்த வகையில் தஞ்சையின் கலைப்புகழை பறைசாற்றுவதில் தஞ்சாவூர் தட்டு என்று அழைக்கப்படும் கலைத்தட்டுக்கும் சிறப்பிடம் உண்டு.

தஞ்சாவூர் கலைத்தட்டு இரண்டாம் சரபோஜி மன்னரால் மராட்டியர் ஆட்சிக் காலத்தில் (1777-1832) அறிமுகப்படுத்தப்பட்டது. விழாக்களின் போது பரிசுப்பொருள் வழங்குவதற்காக வட்டமான தட்டுபோல இது 1819-ம் ஆண்டு தஞ்சையை சேர்ந்த கைவினைஞர்களால் தயாரிக்கப்பட்டது. இந்த தட்டு பல்வேறு கலை நுணுக்கங்களுடன் செய்யப்பட்டது.

இந்த கலைத்தட்டு செய்ய அரக்கு, பித்தளை, செம்பு, சுத்தமான வெள்ளி போன்ற மூலப்பொருட்கள் தேவை. இந்த தட்டுகளை தயாரிக்க உளி, சிற்றுளி, கருப்பு அரங்கு ஊற்றி மரப்பலகை, உருவம் தயாரித்த ஈய அச்சு ஆகியவை ஆகும். இந்த ஓவியத்தட்டின் அடித்தட்டு பகுதி 2 பகுதிகளாக அமைக்கப்பட்டுள்ளது. முதன்மையான வடிவமைப்பு வட்டமான உலோகத்தட்டையும், அதன்பின்பு 2-வது வடிவமைப்பையும் கொண்டது. அதில் பித்தளை தகட்டையும், வெள்ளித்தகட்டில் சிற்பம் செதுக்கப்படுகிறது.

இந்தத்தட்டு முதலில் மயில், கோபுரம், தாமரை, நடராசர், பதஞ்சலி, தாமரைபூவின்மேல் நிற்கும் பார்வதி போன்ற வடிவங்களில் தயாரிக்கப்பட்டது. பின்னர் நாளடையில் நவீன தொழில் நுட்பத்திற்கு ஏற்ப தலைவர்களின் முகம் பதிக்கப்பட்டு வருகிறது. மேலும் நவீன காலத்திற்கு ஏற்ப தற்போது அரசியல் கட்சி தலைவர்களின் உருவம், கம்பெனி லோகோ, விளையாட்டு போட்டிகள் தொடர்பான படம் போன்றவையும் கலைத்தட்டுகளில் தயார் செய்யப்பட்டு வருகிறது. இதனால் கலைத்தட்டுகளை விரும்புவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கலைத்தட்டுக்கு மவுசு அதிகரித்துள்ளது.

இந்த கலைத்தட்டுகளை அரக்கு பலகை, சுத்தமான வெள்ளி, தாமிரத்தகடு போன்ற உலோகங்களை கொண்டும் செய்து வருகிறார்கள். மாமன்னனன் சரபோஜி காலத்திற்கு பிறகு அழியும் நிலையில் இருந்தது இந்த கலை. இதனை செய்து வந்தவர்கள் கூட வேறு தொழிலுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் இந்த கலைக்கு தமிழக அரசு, பூம்புகார் நிறுவனம் மூலம் புத்துயிர் ஊட்டி உள்ளது. முன்பு ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் தான் இந்த கலைத்தட்டுகளை செய்து வந்தனர். பின்னர் தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் சார்பில் இந்த கலைத்தட்டுகளை செய்வதற்கு என்று 1973-ம் ஆண்டு கலைக்கூடம் தயாரிக்கப்பட்டு தற்போது செய்யப்பட்டு வருகிறது. இந்த கலைக்கூடத்தில் பல்வேறு நபர்களுக்கும் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

5 இஞ்ச் முதல் 36 இஞ்ச் வரை இந்த கலைத்தட்டுகள் தயாரிக்கப்படுகிறது. ரூ.450 முதல் ரூ.50 ஆயிரம் வரை இந்த கலைத்தட்டுகள் கிடைக்கப்பெறுகிறது. வழக்கமாக செய்யப்படும் வெள்ளிப்பொருட்களில் செம்பு போன்றவை கலப்படம் செய்யப்படும். ஆனால் கலைத்தட்டுகளில் உள்ள வெள்ளி சுத்தமான வெள்ளி ஆகும். இந்த கலைத்தட்டுகள் செய்யப்பட்டு 200 ஆண்டுகளை எட்டும் நிலையில் உள்ளது.

முன்பு வட்ட வடிவில் மட்டும் தயாரிக்கப்பட்டது. தற்போது சதுரம், முக்கோணம் வடிவிலும் கலைத்தட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. மேலும் கலைப்பொருளாக பயன்படுத்தப்பட்ட தட்டுகள் தற்போது தாம்பூலம், வட்ட வடிவிலான தட்டு போன்றவைகளாகவும், வீட்டு, விசேஷ நிகழ்ச்சிகளில் பயன்படுத்துவதற்கான அலங்கார பொருளாகவும் உருமாறி வருகின்றன. முன்பு கைகளாலேயே செய்யப்பட்ட இந்த தட்டு தற்போது சில தொழில்நுட்பங்களுக்கு எந்திரங்களையும் பயன்படுத்துகின்றனர்.

கலைத்தட்டு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளிகள் கூறுகையில், ‘கலைத்தட்டுகள் வந்து பல ஆண்டுகள் ஆகின்றபோதிலும் இதற்கு என்று தனி மவுசு உள்ளது. அரசு விழாக்களில் தற்போது இந்த கலைத்தட்டுகள் தான் பிரதான இடத்தை பிடித்துள்ளது. அதேபோல் தனியார் நிறுவன விழாக்கள், அலங்காரங்களுக்கும் கலைத்தட்டுகளையே விரும்புகின்றனர். இந்தியா மட்டும் அல்லாது வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் இதனை விரும்புகின்றனர். மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, கனடா, பிரான்சு, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் மற்றும் தமிழர்கள், இந்தியர்கள் வசிக்கும் பகுதிகளுக்கும் இந்த தட்டுகள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்த கலைத்தட்டு தயாரிப்பதினால் சுற்றுச்சூழல் எதுவும் மாசுபடுவது கிடையாது. தூய வெள்ளியில் குறைந்த விலையில் தயாரிக்கப்படும் பரிசுப்பொருள் இது ஆகும். மேலும் 12 இஞ்ச் அளவு கொண்ட தட்டில் அஷ்ட லட்சுமிகள் 8 தெய்வங்களின் படங்களும் இதில் பதிக்கப்பட்டு இருப்பதால் இதனை அதிக அளவில் விரும்பி வாங்கி செல்கிறார்கள். மேலும் இந்த கலைத்தட்டிற்கு நாளுக்கு நாள் மதிப்பு அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது.

இந்த தட்டில் தூய வெள்ளி, பித்தளை போன்றவை பயன்படுத்துவதால் இதன் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இது கெட்டுப் போகும் பொருள் அல்ல. நாளுக்கு நாள் மக்களிடம் இந்த கலைத்தட்டின் மகத்துவமும் அதிகரித்துக்கொண்டே வருகிறது’ என்றனர்.

-கே.எஸ்.ராஜ்

மேலும் செய்திகள்