பூச்சிகளை கட்டுப்படுத்தும் தவளைகள்

மழை வருவதை நமக்கு முதலில் அறிவித்து வந்தவை தவளைகளே. ஆனால், இன்றைக்கு மழையைக் காணவில்லை, அவற்றை முன்னறிவித்த தவளைகளை அழித்து விட்டோம்.;

Update: 2018-03-13 09:41 GMT
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் 225 நீர்நில வாழ் உயிரினங்கள் இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 92 சதவீத வகைகள் மேற்கு தொடர்ச்சி மலையில் மட்டுமே வாழக்கூடிய ஓரிட வாழ் உயிரினங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 2006-ல் இருந்து 2015 வரையிலான இடைப்பட்ட காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மட்டும் 103 புதிய தவளை வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. இன்னும் கண்டறியப்படாத தவளை, தேரை வகைகள் ஏராளமாக உள்ளன.

மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தவளைகள், தேரைகள் பல வழிகளில் தனித்தன்மை வாய்ந்தவை. பசுமை மாறாக் காடுகளில் உள்ள மரங்களின் உச்சிகளில் வசிக்கும் களக்காடு பறக்கும் தவளை, மர உச்சியிலிருந்து தரைக்குச் சறுக்கி வந்து, தண்ணீர் குட்டைகளின் மேலே தொங்கும் இலைகளில் முட்டையிடுகிறது.

தவளைகளும், தேரைகளும் பூச்சிகளைத் தின்று அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்பாட்டில் வைக்கின்றன. பசுமை மாறாக் காடுகளில் உள்ள இரவுத் தவளை மூன்று மணி நேரத்துக்குச் சராசரியாக 20 பூச்சிகளைத் தின்கிறது. இப்படி இவை 70-க்கும் மேற்பட்ட பூச்சி இனங்களை உட்கொள்கின்றன. எறும்புகள், கரையான்கள், நெற் பயிருக்குச் சேதம் விளைவிக்கும் பூச்சிகள் மற்றும் கொசுக்களை நெல் வயல்களில் வசிக்கும் ஊசி வாய்த் தவளைகள் உட்கொள்கின்றன.

தவளைகள் மறைந்து விட்டால் உலகம் கொசுக்களின் கூடாரமாகி விடும். இப்படிப் பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்பாட்டில் வைப்பதில் தவளைகள் பெரும் பங்காற்றுகின்றன. மேலும் பாம்புகள், பறவைகளுக்கு முக்கிய இரையாகவும் தவளைகள் அமைந்து உணவுச் சங்கிலியில் பெரும் பங்காற்றுகின்றன.

அதிகமான பூச்சிக்கொல்லி பயன்பாடு, வாழிட அழிவு, நோய் ஆகியவை இவற்றின் வாழ்க்கையைக் கடினமாக்கி அழிவின் விளிம்புக்குக் கொண்டு சென்றுவிட்டன. விவசாய நிலங்களில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி, செயற்கை உரங்கள் தவளைகளுக்குப் பேராபத்தை விளைவிக்கின்றன. அமெரிக்காவில் அளவுக்கு மிஞ்சிய களைக்கொல்லி பயன்பாட்டால் ஆண் தவளைகள், பெண் தவளைகளாக மாறி வருகின்றன.

தவளைகளும், தேரைகளும் குளிர் ரத்த உயிரினங்கள். சுற்றுப்புற வெப்ப அளவு, ஈரப்பதம் போன்றவற்றால் இவற்றின் உடல் சூடு கட்டுப்படுத்தப்படுவதால் புவி வெப்பமயமாதல் இவற்றையும் பாதிக்கிறது. இரவு நேரங்களில் காட்டுப்பகுதிகளில் செல்லும் சாலைகளில் வாகனங்களில் அடிபட்டு இறக்கும் தவளைகள் ஏராளம். எனவே தவளை இனங்களை அழிவில் இருந்து காப்பது அவசியமாகும்.

மேலும் செய்திகள்