விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு கவனமுடன் பரிசீலித்து வருகிறது சட்டசபையில் முதல்-மந்திரி பேச்சு
விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு கவனமுடன் பரிசீலித்து வருவதாக சட்டசபையில் முதல் - மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.
மும்பை,
நாசிக்கில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மும்பை மந்திராலயா நோக்கி பேரணியாக வந்தனர். அவர்கள் ஆசாத் மைதானத்தில் திரண்டு தர்ணா போராட்டம் நடத்தினர்.
இந்தநிலையில் நேற்று சட்டசபையில் எதிர்கட்சியினர் விவசாயிகள் பிரச்சினையை எழுப்பினர். அனைத்து கட்சியினரும் விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என பேசினர். மேலும் அவர்கள் அமைதியான முறையில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
ஏன் முதலில் பேச்சுவார்த்தை நடத்தவில்லை?
இந்தநிலையில் விவசாயிகள் போராட்டம் குறித்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் பேசியதாவது:-
நேற்று முன்தினம் இரவு விவசாயிகள் மும்பை சோமையா மைதானம் வந்தடைந்தனர். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக நேற்று அதிகாலையிலேேய அவர்கள் ஆசாத் மைதானத்தை வந்தடைந்தனர். மும்பைவாசிகளும் விவசாயிகளை நன்றாக கவனித்து வருகின்றனர். ஆனால் விவசாயிகள் தங்கள் பேரணியை தொடங்கும் முன்பே ஏன் அரசு அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தவில்லை?. அப்படி அரசு பேச்சு வார்த்தை நடத்தி இருந்தால் பழங்குடியின மக்களும், விவசாயிகளும் இதுபோன்று கஷ்டப்படுவதை தவிர்த்து இருக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னாள் துணை முதல்-மந்திரி அஜித் பவார் பேசும்போது, " விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற எல்லா கட்சிகளும் ஆதரவு அளிக்கின்றன. விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து அரசும், மந்திரி சபை கமிட்டியும் முடிவு எடுப்பதற்கு முன், கோரிக்கைகளை நிறைவேற்றவில்லையென்றால் மும்பையை விட்டு வெளியேற மாட்டோம் என விவசாயிகள் கூறியிருப்பதால் அரசு முதலில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யவேண்டும் " என்றார். இதேபோல விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கட்சியை சேர்ந்த கண்பத்ராவ் தேஷ்முக், சிவசேனாவின் சம்புராஜி தேசாய் ஆகியோரும் விவசாயிகளுக்கு ஆதரவாக பேசினர்.
கவனமுடன் பரிசீலிக்கும்
் இதற்கு பதில் அளித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசியதாவது:-
பேரணியில் கலந்து கொண்டுள்ளவர்களில் 90, 95 சதவீதம் பேர் ஏழை பழங்குடியின மக்கள். அவர்கள் வனநில உரிமைக்காக போராடி வருகின்றனர். அவர்கள் சொந்த நிலம் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாமல் உள்ளனர். அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை கவனமாகவும், நேர்மறை கோணங்களிலும் பரிசிலீத்து வருகிறது. விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து அவர்களின் பிரநிதிகளுடன் பேச்சு நடத்த மந்திரிசபை கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் முடிவுகள் எடுக்கப்படும். நாங்கள் 6-ந் தேதி முதல் பேரணியில் ஈடுபட்ட விவசாயிகளின் பிரநிதிகளுடன் பேசி வந்தோம். ஆனால் அவர்கள் பேரணியை விட முடியாது என பிடிவாதமாக இருந்துவிட்டனர். இதையடுத்து அரசு பேரணியில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி கொடுத்தல், மருத்துவ உதவி வாகனம் உள்ளிட்ட அனைத்து உதவியையும் வழங்கியது.
இவ்வாறு முதல்-மந்திரி தேவேந்திரபட்னாவிஸ் பேசினார்.