மோட்டார்சைக்கிள் திருடியதாக வாலிபர் அடித்துக்கொலை 3 பேரிடம் விசாரணை

மோட்டார்சைக்கிளை திருடியதாக கூறி வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-03-12 23:00 GMT
வாலாஜா,

வாலாஜா அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகன் சக்திவேல் (வயது 20), அடிக்கடி நண்பர்களுடன் மோட்டார்சைக்கிளில் வெளியிடங்களுக்கு சென்று சுற்றி வருவாராம். இதே தெருவின் அருகில் உள்ள கடப்பரங்கய்யன் தெருவை சேர்ந்த கோவிந்தசாமியின் மகன் கலைச்செல்வனின் (31) மோட்டார்சைக்கிள் திருட்டு போனது. அது தொடர்பாக கலைச்செல்வன், அவரது சகோதரர் கார்த்தி ஆகியோருக்கு சக்திவேல் மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதனையடுத்து இருவரும் தங்கள் நண்பர் சதீஷ்குமாரை அழைத்துக்கொண்டு சக்திவேலை ஒரு இடத்துக்கு கூட்டிச் சென்றனர். அங்கு அவரிடம் திருடிய மோட்டார்சைக்கிளை திருப்பி கொடுத்து விடு என கேட்டு 3 பேரும் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த சக்திவேலை ஆட்டோவில் தூக்கிச் சென்று அவரது வீட்டின் முன் போட்டு விட்டு 3 பேரும் தப்பிவிட்டனர். படுகாயத்துடன் துடித்த சக்திவேலை அவரது பெற்றோர் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சதீஷ்குமார் இறந்து விட்டார்.

இது தொடர்பாக வாலாஜா போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து கலைச்செல்வன், அவரது சகோதரர் கார்த்தி, நண்பர் சதீஷ்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்