திருப்பத்தூரில் கிணற்றில் குளித்த 2 வாலிபர்கள் நீரில் மூழ்கி பலி

கிணற்றில் குளிக்க சென்ற 2 வாலிபர்கள் நீரில் மூழ்கி பலியானார்கள்.

Update: 2018-03-12 22:45 GMT
திருப்பத்தூர்,

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள கோட்டை தெரு தர்கா பகுதியை சேர்ந்தவர் நவாஸ். இவரது மகன் சையத் ரியாஸ் (வயது 19), திருப்பத்தூரில் உள்ள மளிகைக் கடையில் பணிபுரிந்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த சலீம் மகன் ஷமீர் (19), ஒர்க்‌ஷாப் ஒன்றில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். வேலைநேரம் முடிந்தபின்னர் எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாகவே செல்வர்.

நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் சையத் ரியாஸ், ஷமீர் ஆகிய 2 பேரும் சந்தித்து பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் மதியத்துக்கு மேல் பெரிய ஏரி பகுதியையொட்டி நூர்நகர் என்ற இடத்தில் உள்ள விவசாய கிணற்றில் குளிப்பதற்காக சென்றனர். இருவருக்கும் நீச்சல் தெரியாது.

இந்த நிலையில் முதலில் சையத் ரியாஸ் கிணற்றில் குதித்தார். நீரில் மூழ்கி மேலே வந்த அவர் தண்ணீரில் தத்தளித்தார். அதிர்ச்சியில் இருந்த அவர் தன்னை காப்பாற்றக்கோரி கைகளை உயர்த்தியவாறு போராடினார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஷமீர் உடனே அவரை காப்பாற்றுவதற்காக கிணற்றுக்குள் குதித்தார். அவரும் நீரில் மூழ்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் 2 பேரும் நீரில் மூழ்கி இறந்து விட்டனர். ஆள்நடமாட்டம் ஏதும் இல்லாததால் அவர்கள் இறந்தது யாருக்கும் தெரியவில்லை.

இதனிடையே மதியம் வெளியே சென்ற ஷமீரும், சையத்ரியாசும் இரவு வெகுநேரம் வரை வீடு திரும்பவில்லை. அவர்களது பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் இருவரை பற்றிய தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கிணற்றில் மூழ்கி இறந்தது நள்ளிரவு தெரியவந்தது. இது குறித்து திருப்பத்தூர் போலீசாருக்கும் தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக திருப்பத்தூர் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு (பொறுப்பு) மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு படையினரும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கிணற்றுக்குள் இறங்கி 2 பேரின் உடல்களையும் மீட்டனர். அவற்றை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேல்விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்