கத்தியால் குத்தி தொழிலாளி கொலை வாலிபர் கைது

சோமரசம்பேட்டை அருகே கத்தியால் குத்தி தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-03-12 23:00 GMT
சோமரசம்பேட்டை,

சோமரசம்பேட்டையை அடுத்துள்ள எட்டரை மேலத்தெருவை சேர்ந்த மருதமுத்து மகன் நந்தகுமார்(வயது 29). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் திருச்சிக்கு வேலைக்கு சென்று விட்டு பஸ்சில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அன்று மாலை 6.30 மணியளவில் எட்டரை மாரியம்மன் கோவில் அருகே பஸ்சை விட்டு இறங்கி நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த எட்டரை தெற்கு தெருவை சேர்ந்த ராசப்பன் மகன் அய்யர் என்கிற யுவராஜுக்கும்(25), நந்தகுமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த யுவராஜ், இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் நந்தகுமாரின் வயிற்றில் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த நந்தகுமாார், தான் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை தனது குடும்பத்தினருக்கு தெரிவித்தார்.

வீ்ட்டில் இருந்து விரைந்து வந்த அவரது உறவினர்கள் நந்தகுமாரை மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த நந்தகுமாருக்கு மனைவி 3 குழந்தைகள் உள்ளனர்.

தகவல் அறிந்த சோமரசம்பேட்டை போலீசார்் கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்ற யுவராஜை வலைவீசி தேடி வந்தனர்.

எட்டரைக்கு அருகே யுவராஜ் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் அந்த இடத்துக்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர். பின்னர் அவர் மீது வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர். மேலும் இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்