‘ஹெல்மெட்’ பிரச்சினையில் போலீசாரிடம் இருந்து பாதுகாப்பு வழங்ககோரி முற்றுகையிட்டு போராட்டம்

‘ஹெல்மெட்’ பிரச்சினையில் போலீசாரிடம் இருந்து பாதுகாப்பு வழங்க கோரி திருச்சி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். மோட்டார் சைக்கிள்களில் அவர்கள் ஊர்வலமாக வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-03-12 22:45 GMT
திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. அப்போது திருச்சி சோமரசம்பேட்டை பகுதியில் இருந்து சமூக நீதி பேரவை என்ற அமைப்பின் சார்பில் ஏராளமான இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மோட்டார் சைக்கிள்களில் அணிவகுத்து ஊர்வலமாக வந்தனர். அவர்களை கலெக்டர் அலுவலக வாசலில் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். கலெக்டர் அலுவலகத்தின் கேட்டும் இழுத்து மூடப்பட்டது.

அப்போது போலீசாருடன் சமூக நீதி பேரவையின் நிர்வாகிகள் ரவிக்குமார், துரைப்பாண்டி, அய்யப்பன், விவசாய சங்க தலைவர் சின்னத்துரை ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஹெல்மெட் பிரச்சினையில் இருந்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கலெக்டரிடம் மனு கொடுக்க போகிறோம் என அவர்கள் கூறியதை தொடர்ந்து அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

முற்றுகையிட்டு போராட்டம்

இதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தின் உள்ளே சென்ற அவர்கள் தனித்தனியாக தங்களது கைகளில் வைத்திருந்த மனுக்களை கொடுப்பதற்காக குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்ற அரங்கிற்குள் செல்ல முயன்றனர். அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி பஷீர் வெளியே வந்து அவர்களது குறையை கேட்டார். அப்போது அவரை, அவர்கள் முற்றுகையிட்டு கடந்த மாதம் 11-ந்தேதி உய்யகொண்டான் திருமலை பகுதியில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய தேவேந்திரன் என்பவரை போலீசார் தாக்கியதில் அவரது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது.

கடந்த 7-ந்தேதி திருவெறும்பூர் பகுதியில் வாகன சோதனையின்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் எட்டி உதைத்ததில் உஷா என்ற பெண் இறந்து உள்ளார். இந்த இரண்டு சம்பவங்களிலும் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகளை பணியை விட்டே நிரந்தரமாக நீக்க வேண்டும், அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், போலீசார் இலக்கு நிர்ணயித்து ஹெல்மெட் அபராத வசூல் செய்வதால் பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு அடைந்து உள்ளனர். எனவே, போலீசாரிடம் இருந்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரி அவர்கள் மனு கொடுத்தனர். பின்னர் அவர்கள் போலீசாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிவிட்டு கலைந்து சென்றனர். ஒரே நேரத்தில் ஏராளமானவர்கள் மோட்டார் சைக்கிள்களில் கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்