அசாம் வாலிபர் கொடூரமாக குத்திக்கொலை நண்பர் படுகாயம்; போலீசார் விசாரணை

ஓசூர் அருகே அசாம் மாநில இளைஞர் கொடூரமாக குத்திக்கொலை செய்யப்பட்டார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார். இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-03-12 22:15 GMT
ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா பாகலூர் அருகே உள்ளது கொடியாளம். இங்கு தனியாருக்கு சொந்தமான ரோஜா தோட்டங்கள் உள்ளன. இங்கிருந்து ரோஜாக்கள் வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த தோட்டங்களில் வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலரும் தங்கி குடும்பத்துடன் வேலைப்பார்த்து வருகிறார்கள்.

அந்த வகையில் கொடியாளம் அருகே உள்ள செங்கூரில் உள்ள ஒரு ரோஜா தோட்டத்தில் அசாம் மாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி வேலைப்பார்த்து வருகிறார்கள். அருகில் உள்ள மற்றொரு தோட்டத்தில் அசாம் மாநில இளைஞர்கள் சிலர் தங்கி பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஒரு ரோஜா தோட்டத்தில் வேலைப்பார்த்து வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹரீஸ் ஜோதி குருநாத் (வயது30), குப்தா (27) ஆகியோருக்கும், மற்றொரு தோட்டத்தில் பணிபுரிந்து வரும் சுனில் (28), திபீல் (25) ஆகியோருக்கும் இடையே பணம் கொடுக்கல் - வாங்கல் தொடர்பாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு அவர்கள் 4 பேரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்தனர்.

அப்போது பணம் விவகாரம் தொடர்பாக இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர்களுக்குள் வாக்குவாதமாகி கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த சுனில், திபீல் ஆகிய 2 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஹரீஸ்ஜோதி குருநாத், மற்றும் குப்தா ஆகிய 2 பேரையும் சரமாரியாக குத்தினார்கள். இதில் ஹரீஸ்ஜோதி குருநாத் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். அவருடைய நண்பர் குப்தா குடல் சரிந்த நிலையில் உயிருக்கு போராடினார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் சுனில், திபீல் ஆகிய 2 பேரும் தப்பி ஓடி விட்டனர். இது குறித்து பொதுமக்கள் பாகலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த குப்தாவை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிறகு அவர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு திவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதைத்தொடர்ந்து ஹரீஸ்ஜோதி குருநாத்தின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சுனில், திபீல் ஆகிய 2 பேரையும் தேடி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்