வருசநாடு அருகே குடிநீருடன் கழிவுநீர் கலப்பதால் நோய் பரவும் அபாயம்

வருசநாடு அருகே குடிநீருடன் சாக்கடை கழிவுநீர் கலப்பதால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2018-03-12 21:30 GMT
கடமலைக்குண்டு,

கடமலை-மயிலை ஒன்றியம் வருசநாடு அருகே தங்கம்மாள்புரம் ஊராட்சியில் வாய்க்கால்பாறை கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்துக்கு தங்கம்மாள்புரம் வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. இதுதவிர அப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டும் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்தநிலையில் இந்த கிராமங்களில் சில இடங்களில் தெருக்குழாய்கள் சாக்கடை கால்வாய் அருகில் அமைந்துள்ளது. மேலும் பெரும்பாலான தெருக்குழாய்கள் தரைக்கு கீழ் ஆழமாக அமைத்து சிறிய தொட்டி கட்டியுள்ளனர். இதனால் தொட்டியில் இறங்கி பொதுமக்கள் தண்ணீர் பிடித்து வெளியே உள்ள பாத்திரத்தில் ஊற்றி எடுத்து செல்லும் அவலநிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் குடிநீர் பிடிக்க மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.

இதேபோல சாக்கடை கால்வாய் அருகில் அமைந்துள்ளதால் கழிவுநீர் கசிந்து தொட்டிகளில் நிறைந்து விடுகிறது. எனவே குடிநீர் வினியோகத்தின் போது பொதுமக்கள் கழிவுநீரை அகற்றிவிட்டு அதன்பின்னர் குடிநீர் பிடித்து செல்லும் நிலை உள்ளது. கழிவுநீர்கால்வாய் அருகே தெருக்குழாய்கள் இருப்பதால் குடிநீருடன், கழிவுநீரும் கலந்து வருகிறது.

இதனால் அந்த தண்ணீரில் 2 நாட்களிலேயே புழுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் வீசுகிறது. அதுமட்டுமின்றி கழிவுநீர் கலந்த குடிநீரை குடிப்பதால் காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். தெருப்பகுதிகளில் உள்ள குழாய்களை சாக்கடை வடிகால் மட்டத்தை விட உயர்த்தி அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாய் மட்டத்துக்கு மேல் குடிநீர் குழாயை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்