கர்நாடக அரசுக்கு எதிராக கடிதம் ஐ.பி.எஸ். அதிகாரி மீது கடும் நடவடிக்கை தலைமை செயலாளருக்கு சித்தராமையா உத்தரவு

கர்நாடக அரசுக்கு எதிராக கடிதம் எழுதிய ஐ.பி.எஸ். அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி தலைமை செயலாளருக்கு சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

Update: 2018-03-12 23:15 GMT
பெங்களூரு, 

கர்நாடக அரசின் தலைமை செயலாளர் ரத்னபிரபாவுக்கு ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்க தலைவரும், கூடுதல் டி.ஜி.பி.யுமான ஆர்.பி.சர்மா ஒரு கடிதம் எழுதினார். அதில் கூறி இருப்பதாவது:-

பாதுகாப்பு இல்லை

கர்நாடகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை. அதிகாரிகள் அடிக்கடி பணி இடமாற்றம் செய்யப்படுகிறார்கள் என்றும் அதில் அதிருப்தியை தெரிவித்து உள்ளார். மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் போலீஸ் அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லை. அதிகாரிகளின் பணியில் அரசியல் தலையீடு இருக்கிறது.

கடந்த 4 ஆண்டுகளில் 6 பேர் பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர்களாக பணியாற்றி உள்ளனர். ஆட்சியில் உள்ளவர்களின் விருப்பப்படி அதிகாரிகள் செயல்படுகிறார்கள். அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி அதிகாரிகளால் பணியாற்ற முடியவில்லை. மைசூருவில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ரஷ்மி, ஷிகா போன்றவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

அரசியல் தலையீடு

பெங்களூரு மாநகராட்சி அலுவலகத்திற்கு நாராயணசாமி என்பவர் தீவைக்க முயற்சி செய்தார். எம்.எல்.ஏ. மகன் நடத்திய தாக்குதல் போன்ற சம்பவங்களில் அரசியல் தலையீடு இருந்தது. இதுகுறித்து அவசரமாக சங்க கூட்டத்தை கூட்டி விவாதிக்க அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

என்னிடம் வந்து சொல்லுங்கள்

தனக்கு தெரியாமல் இந்த கடிதம் தன்னிச்சையாக எழுதப்பட்டு உள்ளதாக ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்க செயலாளர் பிரணாப் மொகந்தி கூறியுள்ளார். இந்த கடிதம் கர்நாடக அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் கடும் கோபம் அடைந்த முதல்-மந்திரி சித்தராமையா, தலைமை செயலாளர் ரத்னபிரபா, மாநில போலீஸ் டி.ஜி.பி. நீலமணி ராஜூ ஆகியோரை அழைத்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது சித்தராமையா, “உங்கள் பிரச்சினை எதுவாக இருந்தாலும் அதுபற்றி என்னிடம் வந்து சொல்லுங்கள். அதை விடுத்து அரசுக்கு எதிராக கடிதம் எழுதி, அதை பகிரங்கமாகவும், ஊடகங்களுக்கும் கொடுத்தது சரியல்ல. இந்த கடிதத்தின் பின்னணியில் இருக்கும் நோக்கம் என்ன?. தேர்தல் நேரத்தில் இதுபோன்று நடந்து கொள்வதை என்னவென்று புரிந்துகொள்வது?. உங்களின் அரசியல் நோக்கம் எதுவாக இருந்தாலும் அதை ஒதுக்கி வைத்துவிட்டு அரசு ஊழியராக பணியாற்ற வேண்டும். வேலை செய்வதை விட பிரச்சினையை உருவாக்குவது தான் அதிகமாக நடக்கிறது. எனவே ஐ.பி.எஸ். அதிகாரி மீதும், ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் செய்திகள்