போடி அருகே மலை ஏற்ற பயிற்சிக்கு சென்ற போது பரிதாபம்: காட்டுத்தீயில் சிக்கிய 10 பேர் உடல் கருகி பலி

போடி அருகே மலை ஏற்ற பயிற்சிக்கு சென்றவர்களில் 10 பேர் காட்டுத்தீயில் உடல் கருகி பலி ஆனார்கள். காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2018-03-12 22:45 GMT
போடி,

சென்னையில் உள்ள பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் 25 பேர், மலை ஏறும் பயிற்சிக்காக தேனி மாவட்டம் போடி அருகே உள்ள இயற்கை எழில் கொஞ்சும் குரங்கணி மலைப்பகுதிக்கு சென்றனர். இந்த பெண்கள் சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு வழிகாட்டியாக சென்னையைச் சேர்ந்த அருண் பிரபாகர் (வயது 25), கன்னியாகுமரியைச் சேர்ந்த விபின் (27) ஆகியோர் சென்றனர்.

சனிக்கிழமை காலை குரங்கணி போய்ச் சேர்ந்த இந்த 27 பேரும், அங்கிருந்து புறப்பட்டு மாலையில் கொழுக்குமலை போய்ச் சேர்ந்தனர். இரவில் அங்கு குடிசை (டென்ட்) அமைத்து தங்கிய அவர்கள், நேற்று முன்தினம் காலை, மலையில் இருந்து கீழே குரங்கணிக்கு புறப்பட்டனர்.

அப்போது, மலையில் ஏறி வந்ததால் கால் வலிப்பதாக கூறி ரேணுகா, சாரதா ஸ்ரீராம், லேகா ஆகிய 3 பெண்கள் கொழுக்கு மலையில் இருந்து, அருகில் கேரள மாநிலத்தில் உள்ள சூரியநெல்லி வழியாக சென்னைக்கு செல்வதாக கூறிவிட்டு கிளம்பிச் சென்றனர். எனவே மீதமுள்ள 22 பெண்களும், 2 வழிகாட்டிகளும் கொழுக்குமலையில் இருந்து குரங்கணி நோக்கி இறங்கி வந்தனர்.

கொழுக்குமலையில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் சமதளமாக உள்ள ஒத்தமரம் என்ற இடத்துக்கு வந்த, அவர்கள் அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் கிளம்பினார்கள்.

இதேபோல் மலை ஏற்ற பயிற்சிக்காக வந்த ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியைச் சேர்ந்த புதுமண தம்பதி விவேக்-திவ்யா மற்றும் அவர்களுடைய உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட 12 பேர் கொண்ட குழுவினரும் அதே ஒத்தமரம் பகுதியில் தங்கி சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு, சென்னை குழுவினருடன் கிளம்பினார்கள்.

குரங்கணி மலை அடிவார பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ எரிந்து கொண்டு இருக்கிறது. அடிவார பகுதியில் இருந்து மேல்நோக்கி செல்லும் மலைப்பாதையில் நீண்ட தூரம் எரியும் இந்த தீ திடீரென்று வேகமாக பரவி ஒத்தமரம் பகுதியை சூழ்ந்தது.

இதனால் சென்னை குழுவினரும், கவுந்தப்பாடி குழுவினரும் தீயில் சிக்கிக் கொண்டு செய்வது அறியாது திகைத்தனர். கரும்புகையுடன் தீ சூழ்ந்து கொண்டதால் உயிர் தப்புவதற்காக நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். அப்போது சிலர் கரடு, முரடான பாறைகளில் தடுமாறி பள்ளத்தில் விழுந்தனர். படுகாயம் அடைந்த சிலர் எழுந்திருக்க முடியாமல் தீயில் கருகினர்.

இந்தநிலையில், சென்னையைச் சேர்ந்த மீனா என்பவர் அங்கிருந்தபடியே தனது செல்போன் மூலம் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போடியில் இருந்து 108 ஆம்புலன்ஸ் குரங்கணிக்கு வந்தது.

இதற்கிடையே, இந்த தகவல் கிடைத்து கிராம மக்கள், போலீசார், தீயணைப்பு துறையினர், வருவாய் துறையினர் என பல்வேறு தரப்பினரும் விரைந்து வந்து, தீயில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கோவையில் இருந்து விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரும் வரவழைக்கப்பட்டது. அதற்குள் இரவு நேரமாகி விட்டதால் மீட்புப்பணியில் சிக்கல் ஏற்பட்டது. என்றாலும் விடிய, விடிய மீட்புப் பணி நடந்தது. நேற்று காலையில் ராணுவ வீரர்களுடன் 3 ஹெலிகாப்டர்கள் மலைப்பகுதியில் பறந்து மீட்புப்பணியில் ஈடுபட்டன.

தீக்காயம் அடைந்து ஆங்காங்கே தவித்துக் கொண்டிருந்த 27 பேர் மீட்கப்பட்டனர். அவர்கள் மதுரை, தேனி, போடி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

காட்டுத்தீயில் சிக்கியவர்களில் 9 பேர் உடல் கருகி பலி ஆனார்கள். ஆங்காங்கே கிடந்த அவர்களுடைய உடல்கள் மீட்கப்பட்டன. இதில் ஒருவரின் உடலை டோலி கட்டி மீட்புக் குழுவினர் குரங்கணிக்கு கொண்டு வந்தனர். மீதமுள்ள 8 பேரின் உடல்களும் ஹெலிகாப்டர் மூலம் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டன.

அந்த ஹெலிகாப்டர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகில் உள்ள மைதானத்தில் இறங்கியது. அங்கிருந்த உடல்கள் ஆம்புலன்சுகளில் ஏற்றப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மேலும் ஒருவர் உயிர் இழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.

பலியானவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

1. சென்னை வேளச்சேரியை சேர்ந்த தமிழ்மொழி மகள் நிஷா (30).

2. சென்னை பூந்தமல்லி விசுவநாதன் தெருவைச் சேர்ந்த ரகுராமன் என்பவரின் மகன் அருண் பிரபாகர் (28) (வழிகாட்டி)

3. ஈரோடு கவுந்தப்பாடி மகாத்மாபுரத்தை சேர்ந்த நடராஜன் மகன் விவேக் (26).

4. கவுந்தப்பாடி மகாத்மாபுரத்தை சேர்ந்த தங்கராஜ் மகன் தமிழ்ச்செல்வன் (26).

5. ஈரோடு மாவட்டம் வளையபாளையம் வட்டக்கல் வலசு கிராமத்தை சேர்ந்த முத்துக்குமார் மகள் திவ்யா (28).

6. காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த பாலாஜி மனைவி புனிதா (26).

7. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகள் அகிலா (27).

8. மதுரை புதுவிளாங்குடி ராமமூர்த்தி நகரை சேர்ந்த திருஞானசம்பந்தம் மகள் ஹேமலதா (30).

9. கடலூர் மாவட்டம் திட்டக்குடி மெயின்ரோட்டை சேர்ந்த செல்வராஜ் மகள் சுபா (28).

10. கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைக்கடை பெருங்குடிசாலையை சேர்ந்த தாமோதரன் மகன் விபின் (30) (வழிகாட்டி).

இவர்களில் சென்னை நிஷா, மதுரை அரசு மருத்துவமனையில் உயிர் இழந்தார். மற்ற 9 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தவர்கள் ஆவார்கள்.

கலெக்டர் வீரராகவ ராவ், மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் முகாமிட்டு அனைத்து ஏற்பாடுகளையும் பார்வையிட்டு டாக்டர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

இதுதொடர்பாக பெரிய ஆஸ்பத்திரி டீன் மருதுபாண்டியன் கூறும்போது, “குரங்கணி தீ விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவருக்கு, ஒரு மூத்த மருத்துவர், 3 நர்சு என்ற விகிதத்தில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கான தனி குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த 9 பேரில் ஒருவர் மட்டுமே 35 சதவீத காயங்களுடன் உள்ளார். மற்ற அனைவரும் 70 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை பலத்த காயங்களுடன் உள்ளனர். இதில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது” என்றார்.

மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த கேரளாவை சேர்ந்த மீனா என்பவரை அவரது உறவினர்கள் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்போவதாக கூறி அவரை அழைத்து சென்றனர். அவர் 40 சதவீதம் தீக்காயம் அடைந்திருந்தார்.

தீ விபத்தில் காயம் அடைந்தவர்களின் விவரங்களை தெரிவிப்பதற்கு வசதியாக மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் புதிய தகவல் மையம் தொடங்கப்பட்டுள்ளது.

பலியானவர்களின் உடல்களை உடனடியாக பிரேத பரிசோதனை செய்து பெற்றோர்கள், உறவினர்களிடம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அதன்படி தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 9 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பலியானவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். ‘சுற்றுலா வந்த இடத்தில் இப்படி கரிக்கட்டையாகிப் போனார்களே’, என்று அவர்கள் கதறியது பார்ப்போரை கண்கலங்க செய்தது.

காட்டுத்தீயில் காயமின்றி தப்பியவர்கள் தங்களது உறவினர்களுடன் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

மேலும் செய்திகள்