குரங்கணி மலை தீ விபத்தில் கிணத்துக்கடவை சேர்ந்த என்ஜினீயர் பலி; மனைவி படுகாயம்

குரங்கணி மலையில் ஏற்பட்ட தீ விபத்தில் கிணத்துக்கடவை சேர்ந்த என்ஜினீயர் பலியானார். படுகாயம் அடைந்த அவரது மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2018-03-12 22:30 GMT
கிணத்துக்கடவு,

கோவைமாவட்டம் கிணத்துக்கடவை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களுடைய மகள்கள் விக்னேஸ்வரி (வயது30), திவ்யா (27) என்ஜினீயரிங் பட்டதாரி.

இதுபோல் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் சித்த மருத்துவர் தாமோதரன். இவரது மகன் விபின் (34). என்ஜினீயரிங் பட்டதாரி. இவர் மலையேறும் பயிற்சியில் ஆர்வம் கொண்டவர். இதனால் அடிக்கடி மலையேற செல்வது வழக்கம். இந்த நிலையில் விபினும், திவ்யாவும் சென்னையில் உள்ள ஒரு ஐ.டி.நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதனை தொடர்ந்து இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் திவ்யாவின் தந்தை விஸ்வநாதன் இறந்துவிட்டார். இதனால் திவ்யாவும், விபினும் கிணத்துக்கடவுக்கு வந்து விட்டனர். அங்கு மாமனார் நடத்தி வந்த மர அறுவை மில்லை விபின் கவனித்து வந்தார். விபினும், திவ்யாவும் சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்கும்போதே அடிக்கடி மலை ஏற்ற பயிற்சிக்கு செல்வது வழக்கமாம். இந்த நிலையில் இருவரும் கடந்த 4 நாளுக்கு முன்பு கிணத்துக்கடவில் இருந்து தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணிமலைக்கு மலை ஏற்ற பயிற்சிக்காக சென்றனர்.

அடர்ந்த வனப்பகுதியில் குழுவினருடன் சேர்ந்து பயிற்சி பெற்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக காட்டுத் தீபற்றி எரிந்து பரவத்தொடங்கியது. இதில் இருவரும் சிக்கிக்கொண்டனர். இதில் விபின் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். திவ்யா படுகாயம் அடைந்தார். பின்னர் அவர் மீட்கப்பட்டு, மதுரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்ததும் திவ்யாவின் தாயார் கலைச்செல்வி மற்றும் உறவினர்கள் தேனிக்கு விரைந்தனர். திவ்யாவின் அக்காள் விக்னேஸ்வரி கணவருடன் பெங்களூருவில் வசித்து வருகிறார். இது பற்றிகேள்விப்பட்டதும் அவரும் மதுரைக்கு விரைந்து சென்றார். 

மேலும் செய்திகள்