கூட்டுறவு துறையை கண்டித்து நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்

நெசவாளர்களுக்கு 3 மாதங்களாக நூல் வழங்காத கூட்டுறவு துறையை கண்டித்து தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2018-03-12 22:00 GMT
ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே புனல்வேலியில் செயல்படும் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் 639 நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கு அரசு சார்பில், மின்சாரத்தில் இயங்கும் வகையிலான பெடல் தறி வழங்கப்பட்டது.

தறி உபகரணங்களை சீரமைக்கவும், கூட்டுறவு சங்கத்தில் இருந்து கொடுக்கப்படும் பல்வேறு ரகதுணிகளை உற்பத்தி செய்யும் வகையில் தறிகளில் மாற்றம் செய்யவும் வங்கி மூலம் மானிய கடன் உதவியும் செய்யப்பட்டது. ஆனால் தறிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப உற்பத்தி பொருட்கள் வழங்கப்படவில்லை என்பது நெசவாளர்களின் குற்றச்சாட்டு ஆகும்.

நெசவாளர்களுக்கு நூல் வழங்காத கூட்டுறவு துறையை கண்டித்தும், 4 வருடங்களாக கூலி உயர்வு இல்லாமல் தவிக்கும் நிலையில் கூலி உயர்வு வழங்க வலியுறுத்தியும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புனல்வேலி நெசவாளர் கூட்டுறவு சங்கம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. எம்.எல்.ஏ.யான தங்கப்பாண்டியன் தலைமை தாங்கினார். காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., பா.ஜனதா, தே.மு.தி.க., த.மா.கா. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் நெசவாளர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து புனல்வேலி நெசவாளர் கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குனர் சங்கரிடம் கேட்ட போது, 50 மேல் காடா ரகத்திற்கும், 84 மேல் துப்பட்டா ரகத்திற்கும் பாவு நூல் வந்துள்ளது எனவும், 18 டன் ஊடை நூல் வரஇருப்பதாகவும் தெரிவித்தார். இன்னும் 2 தினங்களுக்குள் ஊடை நூல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். 

மேலும் செய்திகள்