குடிப்பதற்கு பணம் தர மறுத்ததால் மனைவியை உயிரோடு எரித்துக்கொல்ல முயற்சி, தொழிலாளி கைது

பண்ருட்டி அருகே மது குடிப்பதற்கு பணம் தர மறுத்ததால் மனைவியை உயிரோடு எரித்துக்கொல்ல முயன்ற தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

Update: 2018-03-12 23:30 GMT
பண்ருட்டி,

பண்ருட்டி அருகே உள்ள பூங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 45). தொழிலாளியான இவர், பண்ருட்டியில் உள்ள ஒரு டைல்ஸ் கடையில் வேலை பார்த்து வந்தார். திருமணமானவர். இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த செல்வி(40) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.

மணிகண்டனுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. தினமும் குடித்துவிட்டு செல்வியிடம் தகராறு செய்து வந்தார். கடந்த சில நாட்களாக மணிகண்டன் சரியாக வேலைக்கு செல்லவில்லை. இதனால் செல்வி, கூலி வேலைக்கு சென்றார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மணிகண்டன் குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர், மது குடிப்பதற்கு பணம் கேட்டு மனைவியிடம் தகராறு செய்தார். ஆனால் செல்வியோ தன்னிடம் பணம் இல்லை என கூறி உள்ளார். அதற்கு மணிகண்டன், கழுத்தில் அணிந்துள்ள தாலியை கழற்றி கொடு, அதை விற்று மது குடிக்கிறேன் என்று கூறினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வி, தாலியை கொடுக்க மாட்டேன் என்று உறுதியுடன் கூறினார். இதன் தொடர்ச்சியாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மணிகண்டன் திடீரென, செல்வியின் தாலியை பறித்தார். அந்த தாலியை கேட்டு, செல்வி கதறி அழுதார்.

ஆனால் அவரோ, செல்வியை தாக்கி, வீட்டில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டார். இந்த தீ செல்வியின் உடல் முழுவதும் பற்றி எரிந்தது. தீயின் வெப்பத்தை தாங்க முடியாமல் அவர் அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, தீயை அணைத்தனர். இருப்பினும் செல்வியின் உடல் முழுவதும் தீக்காயங்கள் ஏற்பட்டது.

உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவர், உடனடியாக சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செல்வி சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். ஆனால் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்