கல்பாக்கம் அருகே லாரி டிரைவர் கழுத்தை அறுத்து கொலை, உறவினர்கள் சாலை மறியல்

கல்பாக்கம் அருகே மினிலாரி டிரைவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதை கண்டித்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-03-12 23:00 GMT
கல்பாக்கம்,

கல்பாக்கம் அடுத்த வெங்கப்பாக்கம், பூந்தண்டலம் கிராமங்களுக்கு இடையே கிழக்கு கடற்கரை சாலை பாலம் அருகே நேற்று காலை ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சதுரங்கப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் மற்றும் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில் அந்த வாலிபர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரிந்தது.

மேலும் விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடப்பது, கல்பாக்கம் அடுத்த ஆயப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மினிலாரி டிரைவர் செல்வம் (வயது 37) என்பது தெரிய வந்தது. அவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த செல்வத்தின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள், கொலையாளிகளை உடனடியாக கைது செய்யவேண்டும் என்று கூறி அதே இடத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை ஏற்று அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர் பிணத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்வத்தை கொலை செய்தது யார்?. எதற்காக கொலை செய்தனர்? என விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்