தொழில்நுட்ப கோளாறால் திருச்சியில் ஓடுதள பாதையில் நிறுத்தப்பட்ட சிங்கப்பூர் விமானத்தால் பரபரப்பு

தொழில்நுட்ப கோளாறால் திருச்சியில் ஓடுதள பாதையில் சிங்கப்பூர் விமானம் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் பயணம் செய்த 106 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Update: 2018-03-12 23:00 GMT
செம்பட்டு,

சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு டைகர் ஏர்வேஸ் என்கிற தனியார் விமானம் இயக்கப்படுகிறது. இந்த விமானம் தினமும் திருச்சிக்கு காலை 8.40 மணிக்கு வந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு காலை 9.40 மணிக்கு மீண்டும் சிங்கப்பூருக்கு புறப்பட்டு செல்வது வழக்கம். அதன்படி நேற்று காலை சிங்கப்பூரில் இருந்து அந்த விமானம் 106 பயணிகளுடன் வந்தது. திருச்சி விமான நிலையத்தை அடைந்தவுடன் விமானிகள், விமானத்தை தரையிறக்கினர்.

அப்போது திடீரென்று விமானத்தின் லேண்டிங் கியரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, அதில் இருந்து பயங்கர சத்தம் வந்தது. இதனால் விமானிகளும், அதில் பயணம் செய்த பயணிகளும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக சுதாரித்து கொண்ட விமானிகள் சாதுரியமாக செயல்பட்டு விமானத்தை ஓடுதள பாதையில் நிறுத்தி விட்டு விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கும், அந்த விமான சேவை நிறுவனத்திற்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து சென்று அதிகாரிகள் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் சிறிது நேரம் கழித்து விமானம் ஓடுதள பாதையில் இருந்து வழக்கமாக நிறுத்தும் இடத்திற்கு மெதுவாக இயக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தில் இருந்த 106 பயணிகளும் பத்திரமாக இறக்கப்பட்டனர். பின்னர் தொழில்நுட்ப வல்லுநர்கள் விரைந்து வந்து விமானத்தில் லேண்டிங் கியரில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் உடனடியாக சரி செய்யப்படவில்லை. இதனால் சிங்கப்பூர் பயணம் செய்ய காத்திருந்த 126 பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

இதையடுத்து அவர்களுக்கு விமான நிறுவன அதிகாரிகள் தேவையான வசதிகளை செய்து கொடுத்தனர். விமானத்தில் ஏற்பட்டிருந்த கோளாறு மதியம் சரிசெய்யப்பட்டது. பின்னர் அந்த விமானம் மதியம் 12.30 மணியளவில் 126 பயணிகளை ஏற்றிக்கொண்டு சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றது.விமானிகள் சுதாரித்து கொண்டு சாதுரியமாக செயல்பட்டதால், அதில் பயணம் செய்த 106 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஸ்கூட் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் நிறுத்தப்பட்டு சரிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்