லிங்காயத் சமூகத்தை உடைக்க சித்தராமையா முயற்சி செய்கிறார்

கர்நாடகத்தில் ஆட்சி அதிகார ஆசைக்காக லிங்காயத் சமூகத்தை உடைக்க சித்தராமையா முயற்சி செய்வதாக எடியூரப்பா குற்றம்சாட்டினார்.

Update: 2018-03-11 23:55 GMT
பெங்களூரு,

லிங்காயத் சமூக அரசு ஊழியர்கள் சங்க தொடக்க விழா துமகூருவில் நேற்று நடைபெற்றது. இதில் கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கலந்து கொண்டு புதிய சங்கத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

ஆட்சி அதிகார ஆசைக்காக நமது சமூகத்தை உடைக்க சித்தராமையா முயற்சி செய்கிறார். அவருக்கு லிங்காயத் மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். லிங்காயத்-வீரசைவ சமூகம் ஒரே சமூகம் என்று நடமாடும் கடவுள் என்று மக்களால் அழைக்கப்படும் சிவக்குமாரசாமி பல முறை கூறி இருக்கிறார். ஆயினும் சித்தராமையா நமது சமூகத்தை உடைக்கும் முயற்சியை கைவிடவில்லை.

லிங்காயத் மற்றும் வீரசைவ சமூகத்தை இரண்டாக உடைக்கும் முயற்சியில் சித்தராமையா இறங்கியுள்ளார். எக்காரணம் கொண்டும் நமது சமூகத்தை உடைக்க நான் விடமாட்டேன். நமது சமூகத்தினர் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். கர்நாடகத்தில் மே மாதம் 26-ந் தேதிக்கு பிறகு புதிய அரசு அமையும். அது எங்கள் அரசு இல்லை. உங்கள் அரசு. எங்கள் வீட்டு கதவு அனைவருக்கும் திறந்தே இருக்கும். யார் வேண்டுமானாலும் வந்து என்னை சந்தித்து பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.

கர்நாடகத்தில் மிக மோசமான ஆட்சி நடந்து வருகிறது. மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. லோக்அயுக்தா நீதிபதிக்கே பாதுகாப்பே இல்லை. சாமானிய மக்களுக்கு எங்கே பாதுகாப்பு உள்ளது?. கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. இதனால் மக்களிடையே ஒரு பயமான சூழல் ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைந்த பிறகு இதற்கு நாங்கள் முடிவு கட்டுவோம்.

கர்நாடகத்தில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பிரதமர் மோடியிடம் நிதி உதவி பெற்று நீர்ப்பாசன திட்டங்கள் உள்பட மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு தேவையான பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற பாடுபடுவேன். அதனால் மக்கள் இந்த முறை பா.ஜனதாவுக்கு வாய்ப்பு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

மேலும் செய்திகள்