சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு சொகுசு வசதிகளை செய்து கொடுக்க மாட்டோம்

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு சொகுசு வசதிகளை செய்து கொடுக்க மாட்டோம் என்று சித்தராமையா கூறினார்.

Update: 2018-03-11 23:52 GMT

பெங்களூரு,

முதல்–மந்திரி சித்தராமையா நேற்று துமகூரு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–

பா.ஜனதா தலைவர்கள் பெங்களூருவை பாதுகாப்போம் என்ற பெயரில் பாதயாத்திரை நடத்தி வருகிறார்கள். இது மக்களின் கவனத்தை திசை திருப்பும் செயல். அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் சார்பில் பா.ஜனதாவிடம் இருந்து பெங்களூருவை பாதுகாப்போம் என்ற பெயரில் பாதயாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகு பா.ஜனதாவிடம் இருந்து பெங்களூருவை பாதுகாத்தோம். அடுத்து வரும் நாட்களிலும் கர்நாடகம், பெங்களூருவை பா.ஜனதாவிடம் இருந்து பாதுகாக்க வேண்டியது எங்களின் கடமை ஆகும். பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு சொகுசு வசதிகளை செய்து கொடுக்க மாட்டோம். அத்தகைய வேலையை நாங்கள் செய்ய மாட்டோம்.

குமாரசாமி எப்போதும் ‘ஹிட் அன்டு ரன்‘ போன்றே கருத்துகளை தெரிவிக்கிறார். அதனால் அவர் கூறும் கருத்துகளை பற்றி நான் கவலைப்படுவது இல்லை. ஜனதா தளம்(எஸ்) கட்சியின் பலம் என்ன என்பது மக்களுக்கு தெரியும். கொரட்டகெரே தொகுதியில் மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் வெற்றி பெறுவது உறுதி.

நான் முதல்–மந்திரி ஆன பிறகு இந்த தொகுதிக்கு வர எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இங்குள்ள ஜனதா தளம்(எஸ்) கட்சி எம்.எல்.ஏ. என்னை வளர்ச்சி பணிகள் தொடங்கி வைப்பதற்காக அழைக்கவில்லை. இப்போது எனக்கு அழைப்பு வந்தது. அதனால் இங்கு வந்தேன். இந்திரா உணவகத்தை தொடங்கி வைத்துள்ளேன். இதன் மூலம் ஏழைகளின் பசி நீங்கும். கர்நாடகத்தில் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

மேலும் செய்திகள்