ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற விவசாயிகள் பேரணி மும்பை வந்தடைந்தது

பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரக்கணக் கானோர் கலந்து கொண்ட விவசாயிகள் பேரணி மும்பையை வந்தடைந்தது.

Update: 2018-03-11 22:59 GMT
விவசாயிகள் இன்று சட்டசபையை முற்றுகையிட திட்டமிட்டு உள்ளனர்.

மும்பை,

மராட்டியத்தில் நிலவிய கடும் வறட்சி காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடந்தன.

எனவே விவசாயிகளின் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும் என குரல் எழுந்தது. பயிர்க்கடன் தள்ளுபடியை வலியுறுத்தி கடந்த ஆண்டு விவசாயிகள் மாநிலத்தில் பெரியளவில் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

இதையடுத்து, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ரூ.34 ஆயிரம் கோடி வரை பயிர்க்கடனை தள்ளுபடி செய்து அறிவிப்பு வெளியிட்டார்.இந்தநிலையில், விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடியை அறிவிக்கவேண்டும் என அகில இந்திய கிஷான் சபா என்ற அமைப்பு அரசுக்கு கோரிக்கை விடுத்தது.

முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி, விவசாய விளைபொருள்களுக்கு தகுந்த விலை, எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்துதல், ரெயில்வே மற்றும் நெடுஞ்சாலைத் திட்டங்களுக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்த கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அந்த அமைப்பு நாசிக்கில் இருந்து மும்பைக்கு மராட்டிய பட்ஜெட் கூட்டத்தொடரின் போது சட்டசபையை நோக்கி பிரமாண்ட பேரணி நடத்தப்படும் என அறிவித்து இருந்தது.

இதன்படி அந்த அமைப்பு அதிகளவில் விவசாயிகளை திரட்டியது. ஆயிரக்கணக் கான விவசாயிகள் நாசிக்கில் திரண்டார்கள். அவர்கள் கடந்த 6-ந்தேதி நாசிக்கில் இருந்து 180 கி.மீ. தூரமுள்ள மும்பையை நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.

கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாத விவசாயிகள் கைகளில் கொடிகளை ஏந்திக்கொண்டு தங்களது கோரிக்கை குறித்த கோஷங்களை எழுப்பியபடி நடைபயணமாக மும்பையை நோக்கி வந்தனர்.

அவர்களுக்கு மற்ற விவசாய அமைப்புகளும், அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து, பேரணியில் கலந்துகொண்டனர். இதில் 35 ஆயிரம் பேர் பங்கேற்று இருப்பதாக கூறப் பட்டது. சட்டசபையை நோக்கிய விவசாயிகளின் இந்த பிரமாண்ட பேரணி மராட்டியத்தின் மற்ற விவசாயிகளையும் இவர்களது பக்கம் திரும்பி பார்க்க வைத்தது. இது மட்டுமின்றி ஒட்டு மொத்த நாட்டு மக்களின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்து இருக்கிறது.

விவசாயிகளின் இந்த பேரணி நேற்றுமுன்தினம் தானேயை வந்தடைந்தது. அங்கு விவசாயிகளை மாநில பொதுப்பணித்துறை மந்திரி ஏக்நாத் ஷிண்டே நேரில் சந்தித்து அவர்களது கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் விவசாயிகளின் பேரணிக்கு முழு ஆதரவு தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

இதுபோல ராஜ்தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனா கட்சி சார்பிலும் விவசாயிகளின் பிரமாண்ட பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே தானேயில் இரவு தங்கி ஓய்வு எடுத்த விவசாயிகள் நேற்று காலை மீண்டும் அங்கிருந்து தங்களது நடைபயணத்தை தொடங்கினர். இந்தநிலையில் மாலையில் விவசாயிகளின் பேரணி மும்பை பெருநகரத்தை வந்தடைந்தது.

கிழக்கு விரைவு சாலை வழியாக விவசாயிகள் சட்டசபையை நோக்கி பேரணியாக சென்றனர். இதன் காரணமாக கிழக்கு விரைவு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து அடியோடு முடங்கியது.

இதற்கிடையே, மாநில மந்திரி கிரிஷ் மகாஜன் பேரணியாக வந்த விவசாயிகளை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

மேலும் சிவசேனா இளைஞர் அணித்தலைவர் ஆதித்ய தாக்கரேயும் விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்களது பேரணிக்கு ஆதரவு தெரிவித்தார். இந்த நிலை யில் இரவு கண்ணாப்பட்டி மைதானத்தில் விவசாயிகள் தங்கி ஓய்வு எடுத்தனர்.

மராட்டிய அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், மும்பையை வந்தடைந்து உள்ள விவசாயிகள் இன்று(திங்கட்கிழமை) சட்டசபையை முற்றுகையிட திட்டமிட்டு உள்ளனர்.

இதையொட்டி சட்டசபை உள்ள நரிமன்பாயிண்ட் பகுதியில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சட்டசபையை நெருங்க விடாமல் பேரணியை தடுத்து நிறுத்த போலீசார் முயன்று வருகிறார்கள். 

மேலும் செய்திகள்