மாவட்டம் முழுவதும் 2–ம் கட்டமாக போலியோ சொட்டு மருந்து முகாம் 1 லட்சத்து 93 ஆயிரம் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது

திண்டுக்கல் மாவட்டத்தில் 2–ம் கட்டமாக 1 லட்சத்து 93 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

Update: 2018-03-11 21:15 GMT
திண்டுக்கல்,

நாடு முழுவதும் போலியோ எனும் இளம்பிள்ளை வாத நோயை முற்றிலும் ஒழிக்க மத்திய சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி ஆண்டுதோறும் 2 முறை சொட்டு மருந்துகள் வழங்கப்படுகிறது. இந்த சொட்டு மருந்து 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் வழங்கப்படும்.

இந்த ஆண்டு முதற்கட்டமாக கடந்த ஜனவரி 28–ந்தேதி சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடத்தப்பட்டது. இதில் விடுபட்ட குழந்தைகளின் வீடுகளுக்கே சென்று சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதற்கிடையே கடந்த ஜனவரி 28–ந்தேதிக்கு பிறகு பிறந்த குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது. அந்த குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2–ம் கட்டமாக நேற்று சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடந்தது. இதையொட்டி, மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பஸ்நிலையம், ரெயில் நிலையங்கள் என மொத்தம் 1,313 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இங்கு நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்துகள் வழங்கப்பட்டன. மேலும், 33 நடமாடும் மையங்கள் மூலமாகவும் சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இந்த பணிகளில் 5 ஆயிரத்து 343 பணியாளர்கள் ஈடுபட்டனர். நேற்று மாவட்டம் முழுவதும் சுமார் 1 லட்சத்து 93 ஆயிரம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்