நத்தம் அருகே கிணற்றில் பிணமாக மிதந்த தொழிலாளி போலீசார் விசாரணை

நத்தம் அருகே கிணற்றில் தொழிலாளி பிணமாக மிதந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-03-11 20:28 GMT
நத்தம்,

நத்தம் அருகே கருத்தலக்கம்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி (45). கூலித்தொழிலாளி. கடந்த 7–ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற பழனிச்சாமி பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அவருடைய மனைவி புஷ்பா (40) நத்தம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அவரை தேடி வந்தனர்.

இதற்கிடையே அப்பகுதியில் உள்ள கிணற்றில் ஒரு ஆண் பிணமாக மிதப்பதாக பொதுமக்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் நத்தம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார், தீயணைப்பு படையினரின் உதவியுடன் பிணத்தை மீட்டனர். அப்போது அவர் காணாமல் போன பழனிச்சாமி என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அடித்து கிணற்றில் தூக்கி வீசினார்களா? என்பது தெரியவில்லை.

இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராம்நாராயணன், மர்மசாவு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்