ராகுல்காந்தி கருத்தை அங்கீகரித்து பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்

ராகுல்காந்தி கருத்தை அங்கீகரித்து பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று திருச்சியில் தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2018-03-11 23:00 GMT
திருச்சி,

ராஜீவ் கொலையாளிகளை மன்னித்துவிட்டதாகவும், பிரபாகரன் குடும்பத்துக்காக வேதனைப்பட்டதாகவும் கூறியதன் மூலம் ராகுல்காந்தி தமிழர்களின் இதயத்தில் குடியேறிவிட்டார். அவர் பெருந்தன்மையும், பாரம்பரியமும்மிக்க ஒரு குடும்பத்தை சேர்ந்தவர் என்பதை நிரூபித்துவிட்டார். ஒரு நீண்டநாள் துயரத்துக்கு விடை அளித்ததன் மூலம் காங்கிரஸ் கட்சி மீது இருந்த வருத்தம் போய்விட்டது.

இதற்காக காங்கிரஸ் கட்சிக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். ராகுல்காந்தியின் கருத்தை அங்கீகரித்து ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவை சிறையில் 21 ஆண்டு காலமாக இருந்த ரிஸ்வான் என்ற கைதி நோயினாலும், மனஉளைச்சலினாலும் மரணம் அடைந்து இருப்பதாக தெரிகிறது. அவருடைய மரணம் அந்த கைதியின் குடும்பத்தையும் பாதிக்கிறது. இனி கைதிகள் சிறையில் இறக்காமல் தடுக்கும் வகையில் 10 ஆண்டுகள் நிறைவு செய்த ஆயுள் தண்டனை கைதிகளை சாதி, மத, வழக்கு பேதமின்றி விடுதலை செய்ய வேண்டும். மேலும், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அறிவித்ததை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட செயலாளர் இப்ராகிம்ஷா மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்