பேராசிரியர் மனைவியிடம் சங்கிலி பறிக்க முயற்சி ஆண் வேடமிட்டு கைவரிசை காட்ட வந்த எதிர்வீட்டு பெண் கைது

பேட்டையில் கல்லூரி பேராசிரியர் மனைவியிடம், ஆண் வேடமிட்டு சங்கிலி பறிக்க முயன்ற எதிர்வீட்டு பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-03-11 22:15 GMT
பேட்டை,

நெல்லை பேட்டை காந்திமதி நகரை சேர்ந்தவர் செல்வம். இவர் பேட்டை ம.தி.தா. இந்து கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அவருடைய மனைவி மாலதி (வயது 30). இவர் நேற்று அதிகாலை 5.15 மணி அளவில் தனது வீட்டின் முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு சட்டை, பேண்ட் அணிந்தும், தலையில் தொப்பியும் அணிந்தவாறு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென கண் இமைக்கும் நேரத்தில் மாலதியின் கழுத்தில் கிடந்த 4 பவுன் சங்கிலியை பறிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாலதி உடனடியாக சுதாரித்தார். சங்கிலியை தனது கைகளால் இறுகப் பற்றிக் கொண்டு “திருடன் திருடன்“ என சத்தம் போட்டார்.

இதைக் கேட்டதும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அந்த மர்மநபர் மாலதியின் கையை உதறிவிட்டு தப்பிச் சென்றார். இச்சம்பவத்தில் சங்கிலி பாதியாக அறுந்தது. மாலதியின் கையில் பாதி சங்கிலியும், ரோட்டில் பாதி சங்கிலியும் கிடந்தது.

ஆட்டோ டிரைவரின் மனைவி கைது

இதுபற்றி பேட்டை போலீசில் மாலதி புகார் செய்தார். அந்த புகாரில், தன்னிடம் சங்கிலி பறித்தவர் பெண் தான் என்றும், அநேகமாக தன்னுடைய வீட்டின் எதிர் வீட்டில் வசித்து வரும் ஆட்டோ டிரைவர் ஜோதியின் மனைவி மாடத்தி (26) என்பவராக இருக்கலாம் என்றும் கூறியிருந்தார்.

அதன் பேரில் போலீசார் அந்த பெண்ணின் வீட்டுக்கு வந்தனர். புகாரில் மாலதி அடையாளமாக கூறிய ஆடைகள், அங்குள்ள பிளாஸ்டிக் வாளியில் தண்ணீரில் நனைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் வலுத்த போலீசார், அந்த பெண்ணையும், அவரது கணவரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மாலதியிடம் சங்கிலி பறிக்க முயன்றது மாடத்தி தான் என்பது தெரியவந்தது. பின்னர் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மாடத்தியை கைது செய்தனர்.

பரபரப்பு

எதிர்வீட்டில் வசிக்கும் கல்லூரி பேராசிரியர் மனைவியிடம், ஆண் வேடமிட்டு பெண் ஒருவர் சங்கிலி பறிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்