பண்ருட்டியில் பெட்ரோல் கேனுடன் செல்போன் டவரில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல்

பண்ருட்டியில் பெட்ரோல் கேனுடன் செல்போன் டவரில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்தார். அவரை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

Update: 2018-03-11 22:45 GMT
பண்ருட்டி,

பண்ருட்டியில் கும்பகோணம் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் பின்புறம் 150 அடி உயரமுள்ள செல்போன் டவர் உள்ளது. இந்த செல்போன் டவருக்கு நேற்று காலை 46 வயதுடைய ஒருவர் கையில் பெட்ரோல் கேனுடன் வந்தார். அவர் திடீரென அந்த டவரில் வேகமாக ஏறினார். 75 அடி உயரம் வரை சென்றதும், அவர் நின்று விட்டார்.

பின்னர் அவர் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டு, கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள், இது பற்றி பண்ருட்டி போலீஸ் நிலையத்துக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரியா மற்றும் போலீசார், நிலைய அலுவலர் வைகுண்டபெருமாள் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று ஒலிபெருக்கி மூலம், அவரிடம் பேச்சு கொடுத்தனர். அப்போது அவர், யாராவது மேலே ஏறி வந்தால் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி மிரட்டல் விடுத்தார்.

இதையடுத்து போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் அவருடன் பேச்சு கொடுத்தபடி செல்போன் டவரில் ஏறி, 2½ மணி நேர போராட்டத்துக்கு பின் அவரை மீட்டு கீழே அழைத்து வந்தனர். இதையடுத்து அவர் உடனடியாக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அவரை, பண்ருட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், அய்யன்குறிஞ்சிப்பாடி ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த கண்ணன்(வயது 46) என்பது தெரியவந்தும். அவர் போலீசாரிடம் கூறியதாவது:-

நான் அய்யன்குறிஞ்சிப்பாடியில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறேன். என்னிடம், அதே பகுதியை சேர்ந்த 5 நண்பர்கள் மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்கிறார்கள். நான் வேலை செய்யும் ஒட்டலுக்கு வந்து தகராறில் ஈடுபடுகிறார்கள். இதுபற்றி குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து திருச்சியில் உள்ள எனது தம்பியிடம் தெரிவித்து, பண்ருட்டிக்கு வந்தேன். ஊருக்கு சென்றால், மீண்டும் எனது நண்பர்கள் தகராறில் ஈடுபடுவார்கள் என்பதால் தற்கொலை செய்துகொள்வதற்காக பண்ருட்டியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் கேனில் பெட்ரோல் வாங்கினேன். பின்னர் அந்த பெட்ரோலுடன், செல்போன் டவரில் ஏறினேன். ஆனால் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் என்னை மீட்டு விட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து போலீசார், இது பற்றி குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்து, கண்ணனின் நண்பர்கள் 5 பேர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறினர். பின்னர் கண்ணனுக்கு அறிவுரை கூறி, அவரது குடும்பத்தினரை வரவழைத்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்