பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் - கறவை மாடு வளர்ப்பு

நமது நாடு கிராம வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. இங்கு 30 வகை பசு இனங்கள் உள்ளன.

Update: 2018-03-11 09:42 GMT
மது நாடு கிராம வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. இங்கு 30 வகை பசு இனங்கள் உள்ளன. நாட்டின் மொத்த பால் உற்பத்தி 2015-16-ம் ஆண்டில் 155.5 மில்லியன் மெட்ரிக் டன். தமிழகம் இந்திய அளவில் பால் உற்பத்தியில் 8-வது இடத்தில் இருக்கிறது.

கறவை மாடுகள் வளர்ப்பு பண்ணையாளர்களுக்கு அதிக வருவாய் அளிக்கிறது. அதனால் மகளிர் சுய உதவிக் குழுவினரும், பெண்களும் தங்களுக்கு ஏற்ற கறவை மாடுகளை தேர்வு செய்து பண்ணை அமைத்தோ, வீடுகளிலோ வளர்க்கலாம். ஏனெனில் குடும்பத்திற்கு தினசரி வருவாய் தரக்கூடியது கறவை மாடு. கறவை மாடு வளர்ப்பை சரியான முறையில் கையாண்டால் அதிக லாபம் சம்பாதிக்கலாம்.

இனங்கள்

நமது நாட்டில் கலப்பின பசுக்கள் பால் உற்பத்திக்காக வளர்க்கப்படுகின்றன. அந்த வகையில் சிறந்த கறவை மாட்டினங்கள் தமிழகம் மற்றும் பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், கர்நாடகம், மகாராஷ்டிரம், ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காணப்படுகின்றன. பசுவின் இனங்களை பால் உற்பத்தி இனங்கள், வேலைக்கான இனங்கள், பால் மற்றும் வேலைக்கான இனங்கள் என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

பால் உற்பத்தி இனங்கள்

1. சிவப்புச்சிந்தி

2. சாகிவால்

3. கிர்

4. தார்பார்க்கர்

வேலைக்கான இனங்கள்

1. காங்கேயம்

2. உம்பளாச்சேரி

3. புலிக்குளம்

4. ஆலம்பாடி

5. பர்கூர்

பால் மற்றும் வேலைக்கான இனங்கள்

1. அரியானா

2. காங்ரேஜ்

3. ஓங்கோல்

4. ராத்தி

சிவப்புச் சிந்தி

இந்த இன மாடுகள் கருஞ்சிவப்பு அல்லது மஞ்சள் கலந்த காவி நிறத்தில் இருக்கும். பால்மடி பெரிதாகவும், காம்புகள் சம அளவு கொண்டதாகவும் இருக்கும். 40 முதல் 43-வது மாதத்தில் முதல் கன்றுக்குட்டியை ஈனும். ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 2 ஆயிரம் லிட்டர் பால் தரும் (பசு இனங்களை பொறுத்தவரையில் ஆண்டு ஒன்று என்பது 300 நாட்களை குறிக்கும்) இதன் பாலில் 4.5 சதவீதம் கொழுப்பு சத்து இருக்கும். பசுவானது 350 கிலோ வரை எடைகொண்டது. காளை 450 முதல் 500 கிலோ எடை இருக்கும்.

சாகிவால்

நமது நாட்டில் பஞ்சாப், அரியானா மாநிலங்களில் இந்த இன மாடுகள் காணப்படுகின்றன. பஞ்சாப் மாநிலத்தில் பண்ணைகளில் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. இது, 300 நாட்களில் 2 ஆயிரத்து 200 லிட்டர் பால் வழங்கும் திறன் கொண்டது. மாடுகள் சிவப்பு நிறத்திலும், அதன் அடிப்பகுதியில் வெள்ளை நிறத்திலும், நடுத்தரமான உடல் எடையுடனும் காணப்படும். பாலில் 4.5 சதவீதம் கொழுப்பு சத்து இருப்பதுடன், பசு மாடு 300 முதல் 400 கிலோ எடையும், காளை 500 முதல் 600 கிலோ எடையும் கொண்டிருக்கும். இந்த வகை பசு மாடுகள் 37 முதல் 48 மாதங்களில் தனது முதல் கன்றை ஈனும். கன்று ஈனும் இடைவெளியானது 15 மாதங்கள் என்ற நிலையில் இருக்கும்.

கிர்

குஜராத் மாநிலம் கிர் பகுதியை பூர்வீகமாக கொண்ட இனம் இது. அடர் பழுப்பு நிறத்தில் தொங்கிய காது மடல்களுடன், உயர்ந்த அகன்ற நெற்றிப் பகுதியை கொண்டிருக்கும். ஆண்டுக்கு 2 ஆயிரம் லிட்டர் பால் வழங்கும் திறன் கொண்டது. பாலில் 4.4 சதவீதம் கொழுப்பு சத்து உள்ளது. பசு 350 கிலோவும், காளை 500 கிலோவும் கொண்டிருக்கும். முதல் கன்றை 45 முதல் 54 மாதங்களில் ஈனும்.

தார்பார்க்கர்

அரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் பரவலாக இந்த இன மாடுகள் உள்ளன. வெண்மை நிறத்தில் சராசரி உடல் அமைப்பை கொண்டதாக அமைந்து இருக்கும். இவை வெள்ளை சிந்தி என்றும் அழைக்கப்படுகின்றன. 300 நாட்களில் 2 ஆயிரத்து 600 லிட்டர் பால் கொடுக்கும். பாலில் 4.5 சதவீதம் கொழுப்பு சத்து நிறைந்து இருக்கிறது. 38 முதல் 42 மாதங்களில் முதல் கன்றை ஈனும். ஒவ்வொரு கன்றும் ஈனும் இடைவெளியானது 14 முதல் 15 மாதங்கள் ஆகும்.

காங்கேயம்

வேலைக்கான இனத்தை சேர்ந்தது. பொதுவாக வேலைக்கான இனங்கள் குறைந்த அளவு பால் உற்பத்தி திறன் கொண்டவையாக இருப்பதுடன், உழவு தொழிலுக்காகவும், உழவு சார்ந்த வேலைகளுக்காகவும், வண்டி இழுப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

காங்கேயம் இனத்தை பொறுத்தவரையில் தமிழகத்தின் பெருமை என்கிற பெயர் பெற்ற சிறப்பு வாய்ந்த ஒரு இனமாகும். மிக சிறந்த உழவு இனமாக கருதப்படுகிறது. இதன் பூர்வீகம் திருப்பூர் மாவட்டம் காங்கேயம்.

இந்த வகையின பசுக்கள் சாம்பல் அல்லது வெள்ளை நிறத்திலும், காளைகள் சாம்பல் நிறத்திலும் இருக்கும். நடுத்தரமான உடலமைப்பை பெற்று இருக்கும். மேலும் பறந்த நெற்றியின் நடுவில் குழியுடன் இருக்கும். இதன் கழுத்து பகுதி சிறிதாகவும், நன்கு வளர்ந்த திமிலுடனும் காணப்படும். ஆண்டுக்கு சுமார் 600 முதல் 700 லிட்டர் பால் தரும். பாலில் 3.8 சதவீதம் கொழுப்பு சத்து இருக்கிறது. 44 மாதங்களில் கன்று குட்டியை ஈனும், இடைவெளி காலமானது 16 மாதங்கள் ஆகும். பசு சுமார் 300 முதல் 400 கிலோ எடையும், காளை 400 முதல் 500 கிலோ எடையும் கொண்டதாகும்.

உம்பளாச்சேரி

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி பகுதியில் இது உருவானதாகும். இவை கச்சிதமான உடல் அமைப்பு கொண்டவை. காளைகள் சாம்பல் நிறத்தில் காணப்படும். உடலின் மேற்பகுதியில் வெள்ளை கோடுகள் இருக்கும். பசுக்களில் வெள்ளை நிறத்தில் குறியீடுகள் நெற்றியிலும், முன் மற்றும் பின்னங்கால்களிலும், வாலிலும் காணப்படும். பால் உற்பத்தி திறன் மிகக்குறைந்த இனம் இது.

புலிக்குளம்

கம்பம் பகுதியில் பராமரிக்கப்பட்டு வரும் இனம் இது. கிடை மாடு எனவும் இது அழைக்கப்படும். சிறந்த வேலைக்கான இனமாக இருக்கிறது. சிறிய உடற்கட்டும், சாம்பல் நிறத்துடன் குட்டையான கால்களும், பலமான கழுத்து தோள்பட்டையும் உடையதாகும். பசுக்களின் வால் பகுதிகளில் சிவப்பு நிற குறியீடுகள் இருக்கும்.

ஆலம்பாடி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆலம்பாடி என்கிற இடத்தில் தோன்றிய இனமாகும். இதை காவிரி இனம் என்றும் அழைப்பர். இவை கருப்பு நிறத்திலும், இளஞ்சிவப்பு நிறத்திலும் காணப்படும்.

பர்கூர்

ஈரோடு மாவட்டம் பர்கூர் மலை பகுதியை சேர்ந்த இனம் இது. இந்த இனத்தின் காளை குட்டையான மற்றும் கடினமான கால்களுடன் திமில் பெரிதாகவும் காணப்படும். பசுக்கள் சிவப்பு அல்லது சிவப்பு கலந்த வெள்ளை நிற புள்ளிகளுடன் காணப்படும். மடி சிறியதாகவும் பால் தாரைகள் பெரியதாகவும் இருக்கும்.

வெளிநாட்டு கலப்பினங்கள்

நமது நாட்டு பசுக்களின் பால் உற்பத்தி திறனை அதிகரிக்க வெளிநாட்டு மாட்டினங்கள் கொண்டு வரப்பட்டு கலப்பினங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ஜெர்ஸி, ஹால்ஸ்டீன் பிரிசீயன் இனங்கள் நமது நாட்டில் அதிகளவில் காணப்படுகின்றன.

ஜெர்ஸி

இங்கிலாந்தில் ஜெர்ஸி தீவில் தோன்றிய இனம் இது. செந்நிறம் அல்லது கருஞ் செந்நிறத்தை உடையதாகும். பெரும்பாலும் உடல் முழுவதும் ஒரே நிறத்தினையே பெற்றிருக்கும். சில மாடுகளில் வெண்மையான புள்ளிகள் காணப்படும். இவைகள் நல்ல மடியினையும், பால் உற்பத்தி திறனையும் பெற்றவை. ஆண்டுக்கு 4 ஆயிரத்து 500 லிட்டர் பால் தரும். பாலில் 4.5 சதவீதம் கொழுப்பு சத்து இருக்கிறது. இவை முதல் கன்றுகுட்டியை 26 முதல் 30 மாதங்களில் ஈனும். பசுவின் எடை 300 முதல் 450 கிலோவும், காளையின் எடை 350 முதல் 500 கிலோ எடையும் கொண்டிருக்கும்.

ஹால்ஸ்டீன் பிரிசீயன்

ஹாலந்து நாட்டில் தோன்றியது. இவை கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் திட்டு திட்டாக கொண்டு அமைய பெற்றிருக்கும். ஒரு சில மாடுகள் முழுவதும் வெள்ளை அல்லது கருப்பாகவும் காணப்படும். வெளிநாட்டு இனங்களிலே இவை தான் பெரிய இனமாகும். அதிக பால் உற்பத்தி திறன் கொண்டது, பெரிய உடலும், மடியும், தடித்த பெரிய காம்புகளும் கொண்டது. அமைதியான தன்மை கொண்டது. அதிகமான வெப்பம் உள்ள இடத்தில் இதன் உற்பத்தி திறன் குறையும். பால் உற்பத்தியை பொறுத்தவரையில் ஆண்டுக்கு 6 ஆயிரம் லிட்டர் முதல் 7 ஆயிரம் லிட்டர் வரையில் தரும். பாலில் 3.5 சதவீதம் கொழுப்பு சத்து உள்ளது. முதல் கன்றை 28 முதல் 32 மாதங்களுக்குள்ளும், அதை தொடர்ந்து 14 மாதங்கள் இடைவெளியில் அடுத்த கன்றையும் ஈனும். பசுவின் எடை 550 முதல் 650 கிலோவும், காளையின் எடை 800 முதல் 900 கிலோ வரைக்கும் இருக்கும்.

தமிழகத்துக்கு ஏற்ற கலப்பினம்

நம் நாட்டில் கறவை மாடுகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், அதன் பால் உற்பத்தி திறன் என்பது மிகவும் குறைவே. அதிக பால் கொடுக்கும் வெளிநாட்டு கலப்பினங்களில் பெரும்பாலான இனங்கள் தமிழகத்தின் தட்ப வெப்ப நிலைக்கு உகந்தது இல்லை. நமது தட்ப வெப்ப நிலைக்கு ஜெர்ஸி இனம் ஏற்றதாக இருப்பதால், கலப்பினங்களின் பெருக்கத்திற்கு ஜெர்ஸி இன காளைகள் செயற்கை கருவூட்டல் மூலமாக அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. வெப்பம் அதிகம் உள்ள சமவெளி பகுதிகளுக்கு ஜெர்ஸி கலப்பின கறவை மாடுகள் சிறந்தவை.

அதற்கு அடுத்ததாக ஹால்ஸ்டீன் பிரிசீயன் கலப்பின மாடுகளை வளர்க்கலாம். இவற்றை மலை பாங்கான இடங்கள், கன்னியாகுமரி மாவட்டம், நல்ல பாசன வசதி உள்ள இடங்களில் அதிகம் வளர்க்கலாம்.

ஒரு தனிப்பட்ட கறவை மாட்டின் உற்பத்தி திறன் சிறந்த அளவில் இருந்தால், அதன் பாரம்பரிய உற்பத்தி திறனும் நல்ல அளவில் தான் இருக்கும். இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட கறவை மாடுகள் உற்பத்திக்கு வந்து விடுவதால் நேரடியாகவே அதன் குணாதிசயங்களை பார்த்து அறிந்து கொள்ளலாம். தனிப்பட்ட தோற்றம் அல்லது உற்பத்தியை கணித்து தேர்வு செய்வது எளிது என்பதால் இந்த முறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சில நேரங்களில் தோற்றத்துக்கும், உற்பத்தி திறனுக்கும் சம்பந்தம் இருப்பதில்லை. இருப்பினும் தனிப்பட்ட கறவை மாடுகளின் நேரடியான தரமான குணங்களை கொண்டு தேர்வு செய்யும் முறை சிறந்ததே.

மூதாதையரின் குணாதிசயங்களை நிர்ணயித்து அல்லது பண்ணையில் உள்ள பதிவேடுகளிலுள்ள உற்பத்தி குறித்த தகவல்களை சேகரித்து, அதற்கு பிறந்த கறவை மாடுகளின் குணங்களை தீர்மானித்தும் தேர்வு செய்யலாம். இதில் தாய், தந்தையரின் குணங்கள் கவனத்தில் கொள்ளப்படும்.

சந்ததிகளின் உற்பத்தி குணாதிசயங்களின் அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கலாம்.

(அடுத்த வாரம்: கொட்டகை அமைத்தல் மற்றும் தீவனம் அளிக்கும் முறை)

தகவல்: பி.முரளி, உதவி பேராசிரியர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், கடலூர்.

மேலும் செய்திகள்