உணவுகளை தரமாக சமைத்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் சத்துணவு சமையலர்களுக்கு கலெக்டர் ரோகிணி அறிவுரை
உணவுகளை தரமாக சமைத்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என சத்துணவு சமையலர்களுக்கு கலெக்டர் ரோகிணி அறிவுரை வழங்கினார்.;
சேலம்,
சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் உள்ள உள் விளையாட்டு அரங்கில் சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமில் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பூங்கொடி, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) செல்வன் வரவேற்றார். கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
மாவட்டத்தில் சத்துணவு திட்டத்தின் கீழ் 1,818 மையங்களில் 2 லட்சத்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் நாள்தோறும் சத்துணவு சாப்பிட்டு வருகின்றனர். அவர்களுக்கு உணவு தயாரித்து வழங்கும் பணியில் சுமார் 5 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களுக்கு புத்தாக்க பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சத்துணவில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி 11 வகையான கலவை சாதங்கள், 5 வகையான மசாலா முட்டைகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சமையலர்களுக்கு தன்சுத்தம், சத்துணவு மையங்களின் சுத்தம், சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் உணவு பொருட்களை பயன்படுத்தும் விதம் ஆகியவை முக்கிய பொறுப்பாகும்.
சமையலுக்கு பயன்படுத்துகின்ற பொருட்கள் சுத்தமானதாகவும், சுகாதாரமானதாகவும் இருக்கின்றதா? என்பதை சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். பொருட்களின் காலநிர்ணயம் ஆகியவற்றை சரிபார்த்து பயன்படுத்த வேண்டும். குழந்தைகளை ஆரோக்கியமாகவும், சிறப்பாகவும் வளர்ப்பதற்கு பெற்றோர்களை தாண்டி பள்ளிகளில் சத்துணவு சமைத்து வழங்கும் சத்துணவு பணியாளர்களாகிய நீங்கள் முதன்மையானவர்களாக திகழ்கிறீர்கள்.
சத்துணவு சமையலர்கள், உதவி சமையலர்கள் சிறப்பாக செயல்பட்டு சத்தான உணவுகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும், தரமாகவும் சமைத்து குழந்தைகளுக்கு வழங்கிட வேண்டும் என கேட்டுகொள்கிறேன்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.