நடிகை சிந்து மேனன் உள்பட 4 பேர் மீது வழக்கு

பெங்களூருவில், போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் ரூ.36.78 லட்சம் கடன் வாங்கி மோசடி செய்ததாக நடிகை சிந்து மேனன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Update: 2018-03-10 23:52 GMT
பெங்களூரு,

 சிந்து மேனனின் சகோதரர் உள்பட 2  பேர் இது தொடர்பாக கைது  செய்யப்பட்டு உள்ளனர்.

பிரபல நடிகை சிந்து மேனன். இவர் தமிழில் சமுத்திரம், யூத், ஈரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி திரைப்படங்களிலும் நடித்து உள்ளார். இவருடைய சகோதரர் மனோஜ் வர்மா. இவர் பெங்களூரு யஷ்வந்தபுரம் அருகே வசித்து வருகிறார். இந்த நிலையில், விலையுயர்ந்த கார் வாங்குவதாக கூறிய மனோஜ் வர்மா ஆர்.எம்.சி. யார்டு பகுதியில் உள்ள ஒரு வங்கியில் ரூ.36.78 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.

அதாவது, தனியார் கார் விற்பனை ஷோரூம் பெயரில் போலியான ஆவணங்களை தயாரித்து அவர் வங்கியில் சமர்பித்து கடன் பெற்றுள்ளார். பின்னர், அந்த பணத்தை அவர் நாகஸ்ரீ என்பவரது வங்கி கணக்குக்கு மாற்றி உள்ளார். நீண்ட நாட்கள் ஆனபோதிலும் மனோஜ் வர்மா கடன் தொகையை திரும்ப செலுத்தவில்லை. வங்கியில் இருந்து நோட்டீசு அனுப்பியதற்கும் அவர் சரியாக பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

அப்போது தான் மனோஜ் வர்மா போலியான ஆவணங்களை கொடுத்து கடன் பெற்று மோசடி செய்ததை வங்கி நிர்வாகம் அறிந்தது. மேலும், வங்கியில் கடன் வாங்கும் மனோஜ் வர்மாவின் வங்கி கணக்கில் குறைந்தபட்ச தொகை இல்லாததால் குறிப்பிட்ட தொகையை சிந்து மேனன் தனது வங்கி கணக்கில் இருந்து பரிமாற்றம் செய்தது தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக மனோஜ் வர்மாவுக்கு உடந்தையாக நாகஸ்ரீ, நடிகை சிந்து மேனன் மற்றும் சுதா ராஜசேகர் ஆகியோர் இருந்ததாகவும் வங்கி நிர்வாகம் கருதியது.

இதுதொடர்பாக அவர்கள் 4 பேர் மீதும் வங்கி மேலாளர் ரமேஷ், ஆர்.எம்.சி. யார்டு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் 4 பேரின் மீதும் வழக்குப்பதிவு செய்து கொண்டனர். வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் முதல் நபராக மனோஜ் வர்மாவின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. 2-வது, 3-வது மற்றும் 4-வது நபர்களாக முறையே நாகஸ்ரீ, நடிகை சிந்து மேனன், சுதா ராஜசேகர் ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மனோஜ் வர்மா, நாகஸ்ரீ ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். நடிகை சிந்து மேனன், சுதா ராஜசேகர் ஆகியோரிடம் விசாரணை நடத்த அவர்களை போலீசார் தேடிவருகிறார்கள். 

மேலும் செய்திகள்